உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும்
தேனி பழனிசெட்டிபட்டியில் நடந்த வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் பழனிசெட்டிபட்டியில் நடந்தது. கூட்டத்துக்கு வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் தலைமை தாங்கி, 3-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கருணாநிதி பிறந்தநாளையொட்டி பல்வேறு கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் குறித்து பேசினார்.
கூட்டத்துக்கு பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், தமிழகத்தில் சிறப்பாக நடந்து வரும் தி.மு.க. ஆட்சிக்கு நன்றி தெரிவிப்பது, தி.மு.க. இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சருக்கு கோரிக்கை வைப்பது, கருணாநிதி பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவதோடு அன்றைய தினத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்குவது என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் தேனி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சக்கரவர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செல்லப்பாண்டி, விஜயராஜன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.