ஆடுகள் திருடிய வழக்கில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது

நாமக்கல் அருகே ஆடுகள் திருடிய வழக்கில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஆடுகளின் உரிமையாளரை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

Update: 2022-05-31 19:30 GMT

நாமக்கல்:

நாமக்கல் அருகே ஆடுகள் திருடிய வழக்கில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஆடுகளின் உரிமையாளரை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

வாகன சோதனை

நாமக்கல்- சேந்தமங்கலம் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 ஆடுகளுடன் வந்த2 பேரை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணைநடத்தினர்.

விசாரணையில் அவர்கள் நாமக்கல் இ.பி.காலனியை சேர்ந்த கல்லூரி மாணவர் அரவிந்த வேலன் (வயது19) என்பதும், மற்றொருவர் 11-ம் வகுப்பு மாணவர் என்பதும் தெரியவந்தது. அவர்கள் நாமக்கல் அருகே உள்ள துத்திக்குளம் பகுதியில் இருந்து நண்பர்கள் இருவர், தங்களிடம் ஆடுகளை கொடுத்து நாமக்கல் வரை எடுத்து செல்லுமாறு கூறியதாக தெரிவித்தனர்.

2 பேர் கைது

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் நாமக்கல் முதலாவது குற்றவியல் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட்டு செல்வராஜ், கல்லூரி மாணவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அவர் நாமக்கல் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். 11-ம் வகுப்பு மாணவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். கல்லூரி மாணவர்களிடம் ஆடுகளை கொடுத்தவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து மீட்கப்பட்ட ஆடுகள் யாருடையது என்பது தெரியாததால் போலீசார் 2 நாட்களாக நாமக்கல் போலீஸ் நிலையத்தில் கட்டி வைத்து பராமரித்து வந்தனர். இருப்பினும் அவற்றை தொடர்ந்து பராமரிக்க முடியாததால், நேற்று நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பராமரிப்பிற்காக விட்டு உள்ளனர்.

ஆடுகளின் உரிமையாளர் யார் ?

தற்போது முக்கிய குற்றவாளிகளுடன், ஆடுகளின் உரிமையாளரையும் சேர்த்து போலீசார் தேடி வருகின்றனர்.இருப்பினும் துப்பு துலங்காததால் போலீசார் திணறி வருகின்றனர்.

ஆடுகளை மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்த இருவரும் ஆடுகளை திருடிய இடம் எது என்று எங்களுக்கு தெரியாது என கைவிரித்து விட்டனர். எனவே மீதமுள்ள 2 பேரை பிடித்தால் மட்டுமே ஆடுகளின் உரிமையாளர் யார் ? என தெரியும் என்பதால் அவர்களை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்