கல்லூரி மாணவர் மரணம் வழக்கில் திருப்பம்: காதலியே குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தது அம்பலம்

குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த காதலி கிரீஷ்மாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2022-10-30 16:01 GMT

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தவர் ஷரோன் ராஜ் (வயது 23). இவரது சொந்த ஊர் தமிழக- கேரள எல்லையில் உள்ள பாறசாலை முரியங்கரை ஆகும். அந்த பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை ஷரோன் ராஜ் காதலித்துள்ளார்.

கடந்த 14-ந்தேதி அந்த பெண்ணின் வீட்டிற்கு தனது நண்பருடன் சென்றுள்ளார். வீட்டிற்குள் அவர் மட்டும் சென்று திரும்பினார். சிறிது நேரத்தில் வயிறு வலிப்பதாக கூறிய அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஷரோன் ராஜ் கடந்த 25-ந்தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது கிட்னி உள்பட உடல் உறுப்புகள் செயல் இழந்திருந்ததால் பாறசாலை போலீசாருக்கு மருத்துவர்கள் தகவல் கொடுத்தனர். இதற்கிடையில் தனது மகன் சாவில் மர்மம் உள்ளது. அவன் காதலித்த பெண் கொடுத்த குளிர்பானத்தை குடித்த பிறகே ஷரோன் ராஜூக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவரது தந்தை ஜெயராஜன் போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகார் தொடர்பாக பாறசாலை போலீசார் உரிய விசாரணை நடத்தப்படவில்லை என்றும் அவர் கூறினார். இதற்கிடையில் இந்த வழக்கு மாவட்ட குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது. திருவனந்தபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

அவர்கள் ஷரோன் ராஜின் நண்பரை விசாரித்தபோது, பெண்ணின் வீட்டில் குளிர்பானம் குடித்ததாக ஷரோன் ராஜ் தெரிவித்ததாக கூறினார். இதன் அடிப்படையில் அந்த பெண் மற்றும் அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். இதற்காக அவர்களை விசாரணைக்கு ஆஜராகும்படி அறிவுறுத்தினர். இதையடுத்து இன்று மாலை அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. தமிழக - கேரள எல்லையில் கல்லூரி மாணவன் ஷரோன் ராஜ் உயிரிழந்த விவகாரத்தில் காதலியே விஷம் கொடுத்து கொலை செய்தது விசாரணையில் அம்பலமாகி உள்ளது. குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொன்றதாக காதலி கிரீஷ்மா பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து கிரீஷ்மாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்