ஒரே நாளில் இரண்டு முறை... புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை

சென்னையில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்து புதிய உச்சம் தொட்டு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

Update: 2023-02-02 12:24 GMT



சென்னை,


தங்கம் விலை ஒவ்வொரு நாளும் ஏற்ற, இறக்கத்துடனேயே காணப்பட்டு வருகிறது. கடந்த மாதத்தில் பெரும்பாலும் உயர்வை நோக்கியே தங்கம் விலை பயணித்தது. இதனால் கடந்த மாதத்தில் ஒரு பவுன் தங்கம் ரூ.41 ஆயிரம், ரூ.42 ஆயிரம், ரூ.43 ஆயிரம் என்ற நிலையை கடந்து இருந்தது.

பிப்ரவரி 1-ந்தேதி பட்ஜெட் தாக்கப்படும் என்ற நிலையில், தங்கத்தின் இறக்குமதி வரியில் மாற்றம் இருக்கலாம் என கருதி, தங்கத்தை பலரும் இருப்பு வைக்க தொடங்கினார்கள். இதனால் கடந்த மாதம் 29, 30-ந்தேதிகளில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது.

அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் அதன் விலை சற்று குறைந்து இருந்தது. நேற்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இறக்குமதி வரி அதிகரிப்பு பற்றி அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், இன்று காலையில் சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.43,800க்கு விற்பனையானது. ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.5,475க்கு விற்பனையானது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ1.30 உயர்ந்து ரூ77.30க்கு விற்பனை செய்யப்பட்டது.

பட்ஜெட்டில் இறக்குமதி வரி அதிகரிப்பால் நாட்டில் ஆபரண தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்தது. கொரோனா காலத்தில் 2020-ல் ஆகஸ்டு 7-ந்தேதி ஒரு பவுன் ரூ.43,360 ஆக உயர்ந்திருந்ததே அதிகபட்ச விலையாக இருந்து வந்தது. அன்றைய தினம் ஒரு கிராம் அதிகபட்சம் ரூ.5,420க்கு விற்பனையானது.

இந்த தங்கம் விலை உயர்வு, இனி வரக்கூடிய நாட்களிலும் இருக்கும் என்றும், விலையில் அதிரடி மாற்றம் இருக்கும் என்று தங்க வியாபாரிகள் கூறுகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை மதியம் மற்றும் மாலை என அடுத்தடுத்து ஏற்றத்துடனேயே காணப்பட்டது. இதனால், இன்று மாலை பவுன் ஒன்றுக்கு தங்கம் விலை ரூ.720 அதிகரித்து ரூ.44,040க்கு விற்பனையானது.

இதேபோன்று, ஒரு கிராம் தங்கம் ரூ.5,505க்கு விற்பனையானது. ஒரேநாளில் தங்கம் விலை அடுத்தடுத்து உயர்ந்து புதிய உச்சம் தொட்டிருப்பது வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்