விருத்தாசலத்தில் பன்னிரு கருட சேவை ஊர்வலம்
விருத்தாசலத்தில் பன்னிரு கருட சேவை ஊர்வலம் நடைபெற்றது.
விருத்தாசலம்,
விருத்தாசலத்தில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதத்தில் பன்னிரு கருட சேவை ஊர்வலம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் 23-வது ஆண்டு பன்னிரு கருடாழ்வார் சேவை ஊர்வலம் நேற்று நடைபெற்றது. இதில் மேளதாளம் இசைக்க விருத்தாசலத்தில் உள்ள வரதராஜ பெருமாள், பட்டாபிராம பெருமாள், ராஜகோபால சுவாமி, ரெட்டிக்குப்பம் சீனிவாச பெருமாள், வண்ணாங்குடிகாடு, எரப்பாவூர், சாத்தியம், பெ.பூவனூர் ஆகிய கிராமங்களில் உள்ள வரதராஜ பெருமாள், மன்னம்பாடி வேணுகோபால் பெருமாள், இளமங்கலம், கோவிலூர், விருத்தாசலம் கம்பர் தெருவில் உள்ள ராதாகிருஷ்ண பெருமாள், சிறுமங்கலம், கோமங்கலம், கோபாலபுரம், மங்கலம்பேட்டையில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள், எடையூர், பெரம்பலூர், பவழங்குடி, குன்னத்தூர் கிராமங்களில் உள்ள ஸ்ரீனிவாச பெருமாள், திருப்பயர் பட்டாபிராம பெருமாள், ராசாபாளையம் கண்ணபிரான், எலவனாசூர்கோட்டை ராஜநாராயண பெருமாள், கோமங்கலம் பிரசன்னவெங்கடேச பெருமாள், கோபுராபுரம் ஆதிநாராயண பெருமாள் உள்ளிட்ட 28 ஊர்களில் உள்ள பெருமாள் கோவில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் கருட வாகனத்தில் எழுந்தருளியபடி ஊர்வலமாக வந்தனர். விருத்தாசலம் சாத்துக்கூடல் சாலை வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்த புறப்பட்ட இந்த ஊர்வலம் விருத்தாசலம் கடைவீதி, சன்னதி வீதி, தென்கோட்டை வீதி, மேற்கு ரத வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக நேற்று காலையில் விருத்தாசலம் கடைவீதி ஸ்ரீ வாசவி மஹாலில் திருமஞ்சன வைபவமும், மாலை 5 மணியளவில் மங்களாசாசனங்களுடன் திவ்ய நாம சங்கீர்த்தன பஜனையும் நடைபெற்றது.