மோட்டார்சைக்கிள் விபத்தில் டி.வி. மெக்கானிக் பலி
தூசி அருகே மோட்டார்சைக்கிள் விபத்தில் டி.வி. மெக்கானிக் பரிதாபமாக இறந்தார்.
தூசி
காஞ்சிபுரம் எண்ணைக்கார தெருவை சேர்ந்தவர் ஹாரூண். இவரது மகன் ரபீக் (வயது 44), டி.வி. மெக்கானிக். இவருக்கு மனைவி சுரையா என்ற மனைவியும், ரக்ஷிதா பானு என்ற மகளும், அப்துல்கலாம் என்ற மகனும் உள்ளனர்
இந்த நிலையில் ரபீக் மோட்டார் சைக்கிளில் வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே உள்ள சிறுவனங்காடு கிராமத்திற்கு சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.
சிறுவனங்காடு பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது திடீரென மோட்டார் சைக்கிளில் நிலை தடுமாறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஹாரூண் தூசி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.