தூத்துக்குடிசங்கரராமேசுவரர் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடந்தது.

Update: 2023-04-24 18:45 GMT

தூத்துக்குடி சங்கர ராமேசுவரர் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம் திங்கட்கிழமை காலையில் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

சித்திரை திருவிழா

தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்து உள்ளது பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேசுவரர் கோவில். இங்கு நடைபெறும் விழாக்களில் சித்திரை திருவிழா முக்கியமானதாகும். ஆண்டு தோறும் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் மேலூர் பத்திரகாளியம்மன் கோவிலில் தேரோட்டத்துக்கு அனுமதி பெறுவதற்கான சிறப்பு பூஜை நடந்தது.

நேற்று காலையில் திருவிழா கொடியேற்றம் தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர் தலைமையில் நடந்தது. முன்னதாக விழாவை முன்னிட்டு நேற்று காலையில் கொடிப்பட்டம் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. கோவில் கொடி மரத்தில் சிவபெருமானின் கொடிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு ஏற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்தன.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி சங்கர ராமேசுவரர் கோவில் செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி, விழா கமிட்டியாளர்கள் கோட்டு ராஜா, கந்தசாமி, பி.எஸ்.கே. ஆறுமுகம், செந்தில், சோமநாதன், சாந்தி, முத்து, மந்திரமூர்த்தி, சண்முகம் பட்டர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

தேரோட்டம்

விழா நாட்களில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 3-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. சிறிய தேரில் மகா கணபதி, முருகபெருமானும், பெரிய தேரில் சுவாமி சங்கரராமேசுவரர், பாகம்பிரியாள் அம்பாள் ரத வீதிகளில் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்