தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறியது

அ.தி.மு.க.வை சேர்ந்த தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பஞ்சாயத்து கவுன்சிலர்களின் கூட்டத்தில் நிறைவேறியது.

Update: 2022-09-13 11:55 GMT

தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து அ.தி.மு.க. தலைவருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கவுன்சிலர்கள் கூட்டத்தில் நிறைவேறியது.

மாவட்ட பஞ்சாயத்து

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது. இதில் தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கான தேர்தலும் நடத்தப்பட்டது. 17 உறுப்பினர்களை கொண்ட மாவட்ட பஞ்சாயத்தில் அ.தி.மு.க. 12 வார்டு உறுப்பினர்களையும், தி.மு.க. 5 வார்டு உறுப்பினர்களையும் பெற்றது. தொடர்ந்து நடந்த மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த (5-வது வார்டு) உறுப்பினர் சத்யா தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த மே மாதம் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள், தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து, அந்த தீர்மானத்தை நிறைவேற்றினர். இதனை எதிர்த்து தலைவர் சத்யா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அப்போது ஐகோர்ட்டு, நம்பிக்கையில்லா தீர்மானத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து மீண்டும் 15 உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கான கடிதத்தை கலெக்டருக்கு அளித்தனர்.

தீர்மானம்

அதன்பேரில் நேற்று மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்களின் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட பஞ்சாயத்து செயலாளர் (பொறுப்பு) சண்முகவள்ளி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மொத்தம் 15 உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இதனை தொடர்ந்து மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சத்யாவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை கலெக்டர் செந்தில்ராஜ் வாசித்தார். தொடர்ந்து தலைவர் சத்யா அளித்த பதிலையும் வாசித்தார். அதன்பிறகு நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவளிப்பவர்கள் கை தூக்குமாறு கூறினார். அப்போது கூட்டத்தில் பங்கேற்ற 15 பேரும் தீர்மானத்தை ஆதரித்தனர். இதனால் தலைவர் சத்யாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.

வீடியோ பதிவு

தொடர்ந்து ஒவ்வொரு கவுன்சிலரும் தனித்தனியாக சென்று கூட்டத்துக்கான மினிட் புத்தகத்தில் கையெழுத்திட்டனர். இந்த நடைமுறைகள் அனைத்தும் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டது.

மேலும் இந்த கூட்டம் குறித்த தகவல்கள் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதன்பிறகு தலைவர் நீக்கம் தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்படும். அதனை தொடர்ந்து, புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான நடைமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்