தூத்துக்குடி வ.உசி. துறைமுகத்தைசரக்கு பெட்டக பரிமாற்ற முனையமாக மாற்ற நடவடிக்கை: ஆணைய தலைவர் (பொறுப்பு) பிமல்குமார் ஜா தகவல்

தூத்துக்குடி வ.உசி. துறைமுகத்தை சரக்கு பெட்டக பரிமாற்ற முனையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, ஆணைய தலைவர் (பொறுப்பு) பிமல்குமார் ஜா தெரிவித்தார்.

Update: 2023-08-15 18:45 GMT

தூத்துக்குடி வ.உசி. துறைமுகத்தை சரக்கு பெட்டக பரிமாற்ற முனையமாக மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் (பொறுப்பு) பிமல்குமார் ஜா கூறினார்.

சுதந்திர தினவிழா

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் சார்பில் சுதந்திர தினவிழா துறைமுக பள்ளி மைதானத்தில் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு வ.உ.சி.துறைமுக ஆணைய தலைவர் (பொறுப்பு) பிமல்குமார் ஜா தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து மத்திய தொழில் பாதுகாப்பு படை, துறைமுக தீயணைப்பு படை, துறைமுக பள்ளி மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து துறைமுகத்தில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கும், துறைமுக ஊழியர்களின் குழந்தைகளுக்கும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

பரிமாற்ற முனையம்

விழாவில் வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் (பொறுப்பு) பிமல்குமார் ஜா பேசும் போது, துறைமுகத்தில் 9-வது பொது சரக்கு தளத்தை, 6 லட்சம் சரக்கு பெட்டகங்களை கையாளும் வசதியுடன் கூடிய சரக்கு பெட்டக முனையமாக மாற்றுதல் மற்றும் வடக்கு சரக்கு தளத்தை முழுமையாக எந்திரமயமாக்கல் மற்றும் மிதவை ஆழம் 14.20 மீட்டராக ஆழப்படுத்தும் பணி போன்ற வளர்ச்சி திட்டங்கள் தொடங்கப்பட்டு உள்ளது. 120 டன் திறன் கொண்ட 4 நகரும் பளுத்தூக்கி எந்திரங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் கனவு திட்டமான வெளித்துறைமுக திட்டம் ரூ.7 ஆயிரத்து 55 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தில் 4 மில்லியன் சரக்கு பெட்டகங்களை கையாளும் வசதியை ஏறபடுத்தி, வ.உ.சி துறைமுகம் சரக்கு பெட்டக பரிமாற்ற முனையமாக திகழ்வதற்கான அனைத்து முயற்சிகளையும், அரசு முனைப்புடன் மேற்கொண்டு வருகிறது.

காற்றாலை

புதுப்பிக்கப்பட்ட எரிசக்தியின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு 5 மெகாவாட் சூரிய மின்னாலை மற்றும் 2 மெகாவாட் காற்றாலை திட்டப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இந்திய அரசு வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் கடல் பகுதியில் காற்றாலை, பசுமை ஹைட்ரன் முனையத்தில் சேமிப்பு மற்றும் ஏற்றுமதிக்கான அமைப்புகளை நிறுவ வலியுறுத்தி உள்ளது' என்று கூறினார்.

விழாவில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு செயல்முறை விளக்க நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில் வ.உ.சி. துறைமுக ஊழியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்