தூத்துக்குடியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்:விவசாயிகள் வலியுறுத்தல்
பருவமழை குறைந்து விவசாயம் பாதிக்கப்பட்டு இருப்பதால், தூத்துக்குடி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.
பருவமழை குறைந்து விவசாயம் பாதிக்கப்பட்டு இருப்பதால், தூத்துக்குடி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.
குறைதீர்க்கும் கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம், நேற்று காலையில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். வேளாண்மை இணை இயக்குனர் பழனிவேலாயுதம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் உளுந்து பயிர்கள் மஞ்சள் நோயால் பாதிக்கப்பட்டு, மகசூல் மற்றும் தரம் மிகவும் குறைந்துள்ளது. எனவே, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் உளுந்து, பாசிப்பயறு, மக்காசோளம், மிளகாய் உள்ளிட்ட அனைத்து பயிர்களிலும் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தூத்துக்குடி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையான பயிர் காப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 2021- 22-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டுத் தொகை விவசாயிகளுக்கு விரைவாக கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். பனை பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்ட ரூ.50 லட்சம் நிதியில் பனங்கருப்பட்டி மற்றும் பனங்கற்கண்டு ஆகியவற்றில் கலப்படத்தை கண்டறிவதற்கான வசதியை ஏற்படுத்த வேண்டும். கால்நடை வளர்ப்போருக்கு கிசான் கிரெடிட் கார்டுகள் கிடைக்கவில்லை' என்று தெரிவித்தனர்.
நடவடிக்கை
இதற்கு பதிலளித்து கலெக்டர் கூறுகையில், "மஞ்சள் நோய் தாக்காத உளுந்து விதைகளை பயிரிட விவசாயிகளுக்கு வேளாண்மை துறை சார்பில் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், பெரும்பாலான விவசாயிகள் பழைய விதைகளையே பயிரிட்டதால் தான் மஞ்சள் நோய் தாக்குதல் ஏற்பட்டது. இருப்பினும் மஞ்சள் நோயை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகள் அதிகாரிகள் மூலம் வழங்கப்பட்டது. அனைத்து பயிர்களுக்கும் காப்பீட்டுத் தொகை இந்த மாதத்துக்குள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிசான் கிரெடிட் கார்டு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், உதவி கலெக்டர்கள் கவுரவ் குமார் (தூத்துக்குடி), மகாலட்சுமி (கோவில்பட்டி), புகாரி (திருச்செந்தூர்), தாமிரபரணி வடிநில கோட்ட செயற்பொறியாளர் மாரியப்பன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் சிவகாமி, உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) நாச்சியார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.