பெற்றோருக்கு தெரியாமல் ரெயில் ஏறி வந்த தூத்துக்குடி மாணவிகள்

சென்னையை சுற்றிப்பார்க்க ஆசைப்பட்டு பெற்றோருக்கு தெரியாமல் ரெயிலில் வந்த தூத்துக்குடியை சேர்ந்த 3 மாணவிகள் விழுப்புரத்தில் மீட்கப்பட்டனர்

Update: 2023-08-12 18:45 GMT

விழுப்புரம்

போலீசார் சோதனை

சுதந்திர தின விழாவையொட்டி பாதுகாப்பு நடவடிக்கையாக விழுப்புரம் ரெயில் நிலையத்தின் வழியாக செல்லும் அனைத்து ரெயில்களிலும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று மாலையில் வந்த குருவாயூர்- சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் நிதிக்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துசெல்வம், வரதராஜன், தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவி, ஏட்டுகள் சாமுண்டீஸ்வரி, சங்கரி, அய்யனார் ஆகியோர் ஏறி ஒவ்வொரு பெட்டியாக தீவிர சோதனை நடத்தினர். அப்போது 3 மாணவிகள், போலீசாரை கண்டதும் துப்பட்டாவால் தங்கள் முகத்தை மூடிக்கொண்டனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அந்த மாணவிகளிடம் விசாரித்தபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

3 மாணவிகள் மீட்பு

இதையடுத்து அவர்களை ரெயிலில் இருந்து கீழே இறக்கி விசாரணை நடத்தியபோது அவர்கள் 3 பேரும் தூத்துக்குடியை சேர்ந்தவர்கள் என்பதும், அங்குள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருவதும் தெரிந்தது.

மேலும் விசாரணையில், மாணவிகள் 3 பேரும் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் சென்னையை சுற்றிப்பார்க்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக அவர்கள், நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு செல்லாமல், பெற்றோரிடமும் தகவல் தெரிவிக்காமல் தூத்துக்குடியில் இருந்து மணியாச்சிக்கு பஸ் மூலம் புறப்பட்டு அங்குள்ள ரெயில் நிலையத்துக்கு சென்றனர். சீருடையில் இருந்தால் சந்தேகம் வரும் என்று கருதி தாங்கள் கொண்டு வந்த சுடிதாரை அணிந்துவிட்டு இரவு ரெயில் நிலையத்திலேயே தங்கினர்.

பின்னர் நேற்று காலை அங்கிருந்து குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் சென்னைக்கு பயணம் செய்தனர். இதனிடையே பள்ளி முடிந்து வெகுநேரமாகியும் மாணவிகள் 3 பேரும் வீட்டுக்கு வராததால் அவர்களது பெற்றோர் பதறிப்போய், தூத்துக்குடி சென்ட்ரல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் மாணவிகள் 3 பேரையும் போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வந்ததும் தெரியவந்தது.

பெற்றோருடன் அனுப்பி வைப்பு

இதையடுத்து 3 மாணவிகளையும் போலீசார் மீட்டு அவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர்களும் உடனடியாக விழுப்புரத்துக்கு விரைந்து வந்தனர். இதையடுத்து மாணவிகளுக்கு போலீசார் தகுந்த அறிவுரை வழங்கி அவர்களை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்