தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில்கொரோனா சிகிச்சை பயிற்சி ஒத்திகை

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சை பயிற்சி ஒத்திகை நடந்தது.

Update: 2023-04-10 18:45 GMT

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் நேற்று டீன் சிவகுமார் தலைமையில் கொரோனா சிகிச்சை குறித்த பயிற்சி ஒத்திகை நடந்தது. இதில் டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.

கொரோனா

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் தினசரி கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனை தொடர்ந்து பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நெறிமுறைகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்து உள்ளன. இந்த நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அரசு ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள், உபகரணங்கள், ஆக்சிஜன் மற்றும் மருந்து, மாத்திரைகள் தயார் நிலையில் உள்ளனவா என்று அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் ஆய்வு மற்றும் கொரோனா சிகிச்சை ஒத்திகை நடத்த மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தலின் பேரில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் கொரோனா சிகிச்சை பயிற்சி ஒத்திகை நடத்த தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டது.

ஒத்திகை

அதன்படி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் நேற்று கொரோனா சிகிச்சை பயிற்சி ஒத்திகை நேற்று நடத்தப்பட்டது. கொரோனா தீவிர சிகிச்சை பிரிவில் நடந்த இந்த ஒத்திகை நிகழ்ச்சிக்கு மருத்துவனை டீன் சிவக்குமார் தலைமை தாங்கினார். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான படுக்கை வசதிகள், ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய படுக்கை வசதிகள், மருத்துவ கருவிகள், மருந்துகள் தயார் நிலையில் உள்ளனவா? என ஆய்வு செய்யப்பட்டது. மேலும், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது போல் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் இணைந்து பயிற்சி ஒத்திகையில் ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சியில் மருத்துவ கண்காணிப்பாளர் பத்மநாபன், உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி, துறை கண்காணிப்பாளர் குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்