அறுவடைக்கு தயாரான மஞ்சள் குலைகள்

தூத்துக்குடியில் அறுவடைக்கு மஞ்சள் குலைகள் தயாராக உள்ளது.

Update: 2022-12-17 18:45 GMT

தூத்துக்குடியில் அறுவடைக்கு மஞ்சள் குலைகள் தயாராக உள்ளது.

பொங்கல் பண்டிகை

பொங்கல் பண்டிகை என்றாலே கரும்பு, மண்பானை, வண்ண கோலப்பொடிகள் இவைகள் மட்டுமின்றி முக்கிய பொருளாக மஞ்சள் குலைகளும் உள்ளது. மங்கலத்தின் சின்னமாக மஞ்சள் குலை விளங்குகிறது. இதனால் பொங்கல் பண்டிகையின்போது வீட்டின் முன்பும், பொங்கலிடும் பானையை சுற்றியும் மஞ்சள் குலையை கட்டி பெண்கள் பொங்கலிடுவது வழக்கம்.

வருகிற 15-ந் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடி அருகே உள்ள தங்கம்மாள்புரம், சிவஞானபுரம், சேர்வைகாரன்மடம், ஜக்கம்மாள்புரம், செவத்தையாபுரம் ஆகிய கிராமங்களில் ஒவ்வொரு ஆண்டும் பல ஏக்கர் பரப்பளவில் மஞ்சள் செடிகளை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

அறுவடைக்கு தயார்

மஞ்சள் குலையாக வளர்ந்த பின்னர் பொங்கல் பண்டிகைக்கு முன்பு அறுவடை செய்து தமிழகம் மட்டுமின்றி டெல்லி, மும்பை உள்ளிட்ட இந்தியா முழுவதும் ஏற்றுமதி செய்து வருகின்றனர். வழக்கமாக இந்த மஞ்சள் குலைகள் பயிரிடப்பட்டு 6 மாதத்தில் அறுவடைக்கு தயாராகி விடும்.

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் இங்கு பயிரிடப்பட்டு உள்ள மஞ்சள் குலைகள் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராகி உள்ளது.

விவசாயிகள் மகிழ்ச்சி

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

நாங்கள் ஆண்டு தோறும் மஞ்சள் குலைகள் சாகுபடி செய்து வருகிறோம். இந்த ஆண்டு மஞ்சள் குலைகள் நன்கு செழுமையாக வளர்ந்து உள்ளது. எனவே பொங்கல் பண்டிகைக்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு இந்த மஞ்சள் குலையை அறுவடை செய்து சந்தைகளுக்கு விற்பனை செய்ய கொண்டு செல்வோம். அதுபோல் வியாபாரிகளும் எங்களிடம் நேரடியாக மஞ்சள் குலைகளை மொத்தமாக வாங்கி சென்று விற்பனை செய்வார்கள். இங்கு விளையும் மஞ்சள் குலைகள் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள பல மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு காரணமாக இங்கு பயிரிடப்பட்ட மஞ்சள் குலைகளை வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்ய முடியாத நிலை இருந்து வந்தது. ஆனால் இந்த ஆண்டு எந்தவித கட்டுபாடுகளும் இல்லை. எனவே இந்த ஆண்டு மஞ்சள் குலைகளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்