நீர் வீழ்ச்சி போல் தண்ணீர் விழும் சுரங்கப்பாதை

திருப்பரங்குன்றம் சுரங்கப்பாதைக்குள் நீர் வீழ்ச்சி போல் தண்ணீர் விழுவதால் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

Update: 2023-05-14 18:45 GMT

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் சுரங்கப்பாதைக்குள் நீர் வீழ்ச்சி போல் தண்ணீர் விழுவதால் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

நீர் வீழ்ச்சி

திருப்பரங்குன்றத்தில் மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலக வளாகத்தில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைந்து உள்ளது. மதுரையில் இருந்து பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இந்த சுரங்கப்பாதை வழியாக திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து திரும்பி செல்கின்றனர். பத்திரப்பதிவு அலுவலகம், மாநகராட்சி மருத்துவமனை, கால்நடை ஆராய்ச்சி மையம், மேற்கு மண்டல அலுவலகம், என்ஜினீயரிங் கல்லூரி, மாயாண்டி சுவாமி கோவில், அய்யப்ப சுவாமி கோவில், செங்குன்றம் குடியிருப்பு என பல்வேறு முக்கிய இடங்கள் உள்ள இப்பகுதிக்கு இந்த சுரங்கப்பாதை வழியாக தினமும் ஏராளமானோர் வருகின்றனர்.

பொதுவாக சுரங்கப்பாதையில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கும். ஆனால் கடும் வறட்சியான கோடைகாலத்திலும் கூட வற்றாத படி இந்த சுரங்கப்பாதையில் குளமாக தண்ணீர் தேங்கிய நிலையாக இருந்து வருகிறது. சுரங்கப்பாதையின் சுவர்களில் ஆங்காங்கே நீர் வீழ்ச்சி போல தண்ணீர் எப்போதும் விழுந்து கொண்டே இருக்கிறது.

வாகன ஓட்டிகள் அவதி

இதனால் சுரங்கப்பாதையின் உள்புறத்தின் இருபுறமும் பாசம் படிந்து உள்ளது. மேலும் அந்த வழியாக செல்லக்கூடிய பாதசாரிகள் சிலசமயங்களில் வழுக்கி விழுந்து காயமுற்று செல்கின்றனர். மேலும் சுரங்கப்பாதையின் உள்புறத்தில் குளமாக தண்ணீர் தேங்கிய நிலையிலேயே இருந்து வருவதால் வாகன ஓட்டிகள் இதை கடப்பதற்கு கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நிலைதடுமாறி விழும் அபாயமும் உள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த சுரங்கப்பாதைக்குள் தேங்கிய தண்ணீரில் பயணிகள், மாணவ, மாணவிகள் வந்த அரசு பஸ் சிக்கியது. அதன்பின்னர் சுரங்கபாதைக்குள் தண்ணீர் தேங்காதவாறு மாநகராட்சி நடவடிக்கை எடுக்கும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை.

கோரிக்கை

கோடைகாலமான தற்போதும் சுரங்கப்பாதையின் பக்கவாட்டின் சுவற்றில் இருந்து நீர்வீழ்ச்சி போல 24 மணி நேரமும் தண்ணீர் கொட்டுகிறது. இதனால் தண்ணீர் அதிகமாக தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்