சாலைமறியல் செய்ய முயற்சி
குரூப்-4 தேர்வு எழுத தாமதமாக வந்தவர்கள் சாலைமறியல் செய்ய முயற்சி போலீசார் எச்சரித்து அனுப்பினர்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி அருகே தச்சூரில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் குரூப்-4 தேர்வு நடைபெற்றது. இங்கு காலை 9 மணிக்கு மேல் வந்த 50-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்களை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் சாலை மறியல் செய்ய முயன்றனர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் நீங்கள் உரிய நேரத்தில் தேர்வு மையத்துக்கு வராததால் உங்களை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை் என சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் அவர்கள் தேர்வு எழுதாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
அதேபோல் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் காலை 9.10 மணிக்கு மேல் தேர்வு எழுத வந்திருந்த 50-க்கும் மேற்பட்டவர்களை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. இதனால் அவர்கள் தேர்வு மையத்தின் முன்பு நீண்டநேரம் காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் அவர்களிடம் நீங்கள் குறித்த நேரத்தில் தேர்வு மையத்துக்கு வரவில்லை. கள்ளக்குறிச்சியில் 144 தடை உத்தரவு உள்ளது. எனவே இங்கு கூட்டமாக நின்று ஏதாவது பிரச்சினை செய்தால் உங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.