அதிக அளவில் மண் ஏற்றி வந்த லாரிகளை பொதுமக்கள் சிறை பிடிப்பு

சீர்காழியில் பாதுகாப்பற்ற முறையில் அதிக அளவில் மண் ஏற்றி வந்த லாரிகளை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.

Update: 2023-05-16 18:45 GMT

சீர்காழி:

சீர்காழியில் பாதுகாப்பற்ற முறையில் அதிக அளவில் மண் ஏற்றி வந்த லாரிகளை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.

சாலை விரிவாக்க பணி

நாகை -விழுப்புரம் 4 வழிச்சாலை விரிவாக்க பணி கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கொள்ளிடத்தில் இருந்து தரங்கம்பாடி வரை சாலை விரிவாக்க பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சாலை விரிவாக்க பணிகளுக்காக சீர்காழி அருகே எடமணல் மற்றும் வேட்டங்குடி ஆகிய பகுதிகளில் இருந்து லாரிகளில் சவுடு மண் ஏற்றி செல்லப்படுகிறது.

இவ்வாறு நாள் தோறும் இரவு பகலாக நூற்றுக்கணக்கான லாரிகளில் சவுடுமண் ஏற்றி செல்லும் போது லாரிகளிலிருந்து சாலை முழுவதும் மண் சிதறி கிடப்பதாலும், பாதுகாப்பற்ற முறையில் மண் ஏற்றி செல்லப்படுவதாலும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் தார் சாலை முழுவதும் மண் சாலையாக காட்சியளிக்கிறது.

லாரிகள் சிறைபிடிப்பு

இந்தநிலையில் நேற்று சாலை விரிவாக்க பணிக்காக மண் ஏற்றி சென்ற லாரிகளை சீர்காழி கீழ வீதி பகுதியில் பொதுமக்கள் சிறைபிடித்தனர். சவுடு மண் ஏற்றி செல்லும் லாரிகளால் அப்பகுதியில் சாலை குண்டும் குழியுமாக சேதம் அடைந்துள்ளதாகவும், லாரிகளில் இருந்து சிதறி கிடக்கும் மணலால் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் ஏற்படுவதாகவும் கூறி லாரிகளை சிறை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் 4 வழிச்சாலை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையை தொடர்ந்து சாலையில் கொட்டி கிடக்கும் மண்ணை உடனே அள்ளுவதாகவும், தொடர்ந்து இருபுறமும் தண்ணீர் ஊற்றி தூய்மை செய்வதாகவும் உறுதியளித்தனர்.அதனை ஏற்று சிறைபிடித்த லாரிகளை பொதுமக்கள் விடுவித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்