லாரிகள் மோதி தீப்பற்றி எரிந்தன; டிரைவர்-கிளீனர் பலி

லாரிகள் மோதி தீப்பற்றி எரிந்ததில் டிரைவர்-கிளீனர் உயிரிழந்தனர்.

Update: 2022-08-11 20:09 GMT

துவரங்குறிச்சி:

லாரிகள் மோதல்

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் காற்றாலைக்கான உதிரிபாகங்களை இறக்கிவிட்டு ஒரு டாரஸ் லாரி அங்கிருந்து புறப்பட்டு திருச்சி மாவட்டம் துவாக்குடி நோக்கி வந்து கொண்டிருந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவில் மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் துவரங்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே அந்த லாரி வந்தது.

அப்ேபாது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி, சாலையின் மைய தடுப்புச்சுவரை கடந்து மறுபுறத்தில் உள்ள திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலைக்கு சென்றது. அப்போது எதிரே அரியலூரில் இருந்து சிமெண்டு ஏற்றிக்கொண்டு திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூருக்கு சென்று கொண்டிருந்த லாரி மீது, அந்த லாரி நேருக்கு நேர் மோதியது.

கொழுந்துவிட்டு எரிந்த தீ

இதைத்தொடர்ந்து டாரஸ் லாரி தீப்பற்றி எரிய தொடங்கியதில், மற்றொரு லாரிக்கும் தீ பரவியது. சிறிது நேரத்தில் 2 லாரிகளிலும் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. அப்போது டாரஸ் லாரியில் இருந்து இறங்கிய ஒருவர் உடலில் எரிந்த தீயுடன் சென்று சாலையோரம் விழுந்து உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அளித்த தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீ கட்டுக்குள் வராததையடுத்து மணப்பாறை தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அங்கு வந்தனர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி தீயை அணைத்தனர்.

2 பேர் சாவு

பின்னர் டாரஸ் லாரியில் பார்த்தபோது, அதில் ஒருவர் உடல் கருகி உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு வந்த துவரங்குறிச்சி போலீசார், இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். இதில், இறந்தவர்கள் உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கர் பகுதியை சேர்த்த டாரஸ் லாரி டிரைவர் இந்திர மணிபால்(வயது 37), கிளீனர் பவன் பட்டேல்(25) என்பதும், சிமெண்டு லாரியில் இருந்தவர்கள் உடனடியாக கீழே குதித்து விலகி சென்றதால், அவர்கள் தப்பியதும், தெரியவந்தது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மாவட்ட தீயணைப்பு அதிகாரி அம்பிகா, கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு குத்தாலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லாரிகள் மோதி தீப்பற்றி எரிந்ததில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்