லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்; 3 மாணவர்கள் படுகாயம்

குற்றாலத்தில் லாரி, மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் 3 பள்ளி மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-03-11 18:45 GMT

தென்காசி அருகே உள்ள நன்னகரத்தைச் சேர்ந்தவர்கள் முருகன் மகன் கார்த்திக் மணிகண்டன் (வயது 17), ராமர் மகன் சுபிஷ் (13), பிரவடேகா மகன் ப்ரீத்திம் (15). இவர்களில் கார்த்திக் மணிகண்டன் 12-ம் வகுப்பும், சுபிஷ், ப்ரீத்திம் ஆகியோர் 9-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள். இவர்கள் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் குற்றாலத்தில் இருந்து நன்னகரத்துக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு முன்னால் குற்றாலத்தில் இருந்து கடையத்தில் கனிம வளம் எடுப்பதற்காக டாரஸ் லாரி ஒன்று சென்றது.

பழைய குற்றாலம் செல்லும் திருப்பத்தில் லாரி சென்றபோது, அதை அவர்கள் முந்தி செல்ல முயன்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக லாரியும், மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டன. இந்த விபத்தில், மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். கார்த்திக் மணிகண்டனுக்கு ஒரு கால் முழுவதும் சிதைந்து விட்டது. கார்த்திக் மணிகண்டன், சுபிஷ் ஆகியோர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியிலும், ப்ரீத்திம் தென்காசி அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவர் செங்கோட்டையை சேர்ந்த ஆறுமுகம் மகன் மணிகண்டனை (35) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்