தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை லாரி டிரைவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டம்

தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை லாரி டிரைவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

Update: 2023-07-25 18:45 GMT

வாக்குவாதம்

தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நேற்று மாலையில் தூத்துக்குடி கேம்ப்-1 பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அங்கு சரக்கு ஏற்றி வந்த ஒரு லாரி டிரைவர் வெற்றிவேல் என்பவரிடம் சரக்குக்கான பில்லை காண்பிக்குமாறு கூறினார்களாம். இதில் அந்த லாரி டிரைவருக்கும், வட்டார போக்குவரத்து ஆய்வாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. அப்போது, ஒருவரையொருவர் தாக்கி கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த டிரைவர் வெற்றிவேல் மற்றும் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பெலிக்ஸ் என்பவரும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தனர்.

சாலை மறியல்

இந்த சம்பவம் குறித்து அறிந்த சக லாரி டிரைவர்கள் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக சாலையில் ஆங்காங்கே லாரியை நிறுத்தினர். சுமார் 200-க்கும் மேற்பட்ட லாரி டிரைவர்கள் கேம்ப்-1 பகுதியில் ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த ரோட்டில் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ், லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சகாயம் மற்றும் லாரி டிரைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து லாரி டிரைவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக மாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரை சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. துறைமுகத்துக்கு சென்றவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்