நாமக்கல்லில் லாரியில் கடத்தி செல்லப்பட்ட 400 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார், லாரி டிரைவரை கைது செய்தனர்.
400 கிலோ குட்கா பறிமுதல்
நாமக்கல் வழியாக லாரியில் குட்கா கடத்தி செல்லப்படுவதாக போலீஸ் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நாமக்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்லத்துரை தலைமையில் போலீசார் நேற்று அதிகாலை நாமக்கல் - திருச்சி சாலை ரமேஷ் தியேட்டர் பஸ்நிறுத்தம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நாமக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி சென்ற லாரியை நிறுத்தும்படி சைகை காண்பித்தனர்.
ஆனால் டிரைவர் லாரியை நிறுத்தாமல் சென்றார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் பின்னால் துரத்தி சென்று வேப்பனம் பகுதியில் லாரியை மடக்கி சோதனை செய்தனர். இந்த சோதனையின் போது லாரியில் மூட்டை, மூட்டையாக குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி செல்வது தெரியவந்தது. இதையடுத்து 29 மூட்டைகளில் இருந்த சுமார் 400 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் லாரியுடன் பறிமுதல் செய்தனர்.
டிரைவர் கைது
மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சேலம் மாவட்டம் மேச்சேரியை சேர்ந்த லாரி டிரைவர் கார்த்தி (வயது29) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் பெங்களூருவில் இருந்து ராமநாதபுரத்திற்கு குட்கா உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி செல்லப்படுவது தெரியவந்து உள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.