மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; வாலிபர் பலி

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் வாலிபர் பலியானார். படுகாயம் அடைந்த நண்பருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2022-11-26 18:34 GMT

வாலிபர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் காவிரி மில் பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம். இவருடைய மகன் சந்துரு (வயது 18). இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பரான குருசாமி மகன் சுபாஷ் (18) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் காரைக்குடிக்கு சென்றார். பின்னர் அவர்கள் காரைக்குடியில் இருந்து திருமயம் வழியாக புதுக்கோட்டைக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை சுபாஷ் ஓட்டினார்.

அரசம்பட்டி அருகே வந்தபோது அந்த வழியாக சென்ற லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த சந்துரு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

நண்பருக்கு தீவிர சிகிச்சை

படுகாயம் அடைந்த சுபாஷை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு திருமயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த திருமயம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சந்துருவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்