தாறுமாறாக ஓடிய கார் மோதி தள்ளுவண்டி, மோட்டார் சைக்கிள்கள் சேதம்; மதுபோதையில் இருந்த டிரைவர் மீது வழக்கு

தாறுமாறாக ஓடிய கார் மோதி தள்ளுவண்டி, மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தன. இதுதொடர்பாக மதுபோதையில் இருந்த டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-03-11 18:45 GMT

குளச்சல், 

தாறுமாறாக ஓடிய கார் மோதி தள்ளுவண்டி, மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தன. இதுதொடர்பாக மதுபோதையில் இருந்த டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கார் மோதல்

குளச்சல் பயணியர் விடுதி சந்திப்பு எப்போதும் பொதுமக்கள் மற்றும் வாகன போக்குவரத்தால் நெரிசல் மிகுந்து காணப்படும். இந்த சந்திப்பில் டாஸ்மாக் கடையும் உள்ளதால் இட நெருக்கடியாகவும் இருக்கும். இந்த நிலையில் நேற்று மதியம் அப்பகுதியில் ஒரு கார் வந்தது. அந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டில் இல்லாமல் தாறுமாறாக வந்து டாஸ்மாக் கடை அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த தள்ளுவண்டியில் மோதியது. இதனால் தள்ளுவண்டி சாய்ந்து, அருகில் இருந்த மோட்டார் சைக்கிள் மீது விழுந்தது. இதில் மோட்டார் சைக்கிள் சேதம் அடைந்தது. தள்ளுவண்டியின் கண்ணாடி உடைந்து அதில் இருந்த குளிர்பதன பெட்டி, பாதாம் பால்கள் கீழே கொட்டியது. மேலும் அங்கு நின்ற மற்றொரு மோட்டார் சைக்கிளும் சேதமடைந்தது.

அதன்பிறகும் காரை நிறுத்தாமல் டிரைவர் தொடர்ந்து இயக்கினார். இதனால் அங்கு இருந்தவர்கள் காரை மடக்கி பிடித்து குளச்சல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் காரை ஓட்டி வந்தவர் அழகன்பாறை பகுதியை சேர்ந்த மரிய ஆன்றனி (வயது 40) என்றும் மது போதையில் காரை ஓட்டி வந்ததும் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அவர் மீது மது போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக குளச்சல் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்