இலங்கைக்கு கடத்த முயன்ற 1½ டன் பீடி இலைகள் சிக்கியது

இலங்கைக்கு கடத்த முயன்ற 1½ டன் பீடி இலைகள் சிக்கியது

Update: 2023-06-06 18:45 GMT

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 1½ டன் பீடி இலைகள் சிக்கியது. இது தொடர்பாக மூன்று லோடு ஆட்டோ,  மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தீவிர கண்காணிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு பீடி இலை, வெங்காய விதை, மஞ்சள், கடல் அட்டை மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் அதிக அளவில் கடத்தப்பட்டு வருகின்றன. இதனால் கடலோர பாதுகாப்பு போலீசார், கடலோர காவல்படையினர், உளவுப்பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கையில் பீடி இலையின் விலை தொடர்ந்து அதிகரித்து உள்ளது. இதனால் அதிக அளவில் பீடி இலைகள் இலங்கைக்கு கடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

பீடி இலைகள்

இந்த நிலையில் தூத்துக்குடி தெற்கு பீச் ரோட்டில் உள்ள கடற்கரை பகுதியில் இருந்து பீடி இலைகள் இலங்கைக்கு கடத்தப்படுவதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், இன்ஸ்பெக்டர் விஜயஅனிதா தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு லோடு ஆட்டோவில் இருந்த மூட்டைகளை சிலர் படகில் ஏற்றுவதற்கு முயற்சி செய்தனர். இதை பார்த்த போலீசார் உடனடியாக அங்கு விரைந்தனர். போலீசார் வருவதை பார்த்ததும் அங்கு இருந்தவர்கள் தப்பி சென்று விட்டனர்.

1½ டன் சிக்கியது

தொடர்ந்து கியூ பிரிவு போலீசார் அந்த லோடு ஆட்டோவில் இருந்த மூட்டைகளை சோதனை செய்தனர். அதில் சுமார் 42 மூட்டைகளில் 1½ டன் பீடி இலைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதன் இலங்கை மதிப்பு பல லட்சம் என்று கூறப்படுகிறது.

சோதனையில் சிக்கிய பீடி இலை மூட்டைகள் மற்றும் லோடு ஆட்டோ, 3 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். உரிய விசாரணைக்கு பிறகு பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை சுங்கத்துறையில் ஒப்படைத்தனர். மேலும் தப்பிச் சென்றவர்கள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

----------

Tags:    

மேலும் செய்திகள்