திருச்சி சப்-இன்ஸ்பெக்டரை கல்லால் தாக்கிய வாலிபர் கைது

திருச்சி சப்-இன்ஸ்பெக்டரை கல்லால் தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-06-01 21:24 GMT

திருச்சி தில்லைநகர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் துரைராஜ். இவர் நேற்று முன்தினம் மதியம் தில்லைநகர் பகுதியில் ரோந்து வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, தென்னூர் உழவர் சந்தை மேம்பாலம் அருகே ஒருவர் தகராறு செய்து கொண்டிருப்பதாக இவருக்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல் வந்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் துரைராஜ் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார். பின்னர், அங்கு தகராறு செய்து கொண்டிருந்த வாலிபரிடம் விசாரணை நடத்தி, அங்கிருந்து புறப்பட்டு செல்லும்படி அவர் கூறினார். ஆனால், அந்த வாலிபர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதுடன், அங்கிருந்த கல்லை எடுத்து சப்-இன்ஸ்பெக்டரின் தலையில் தாக்கினார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதுபற்றி உடனே அவர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அந்த வாலிபரை மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். மேலும் சப்-இன்ஸ்பெக்டர் துரைராஜை சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில், அவர் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள பந்தநல்லூரை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகன் கவுதம் (வயது 22) என்பதும், உறவினரை பார்க்க திருச்சிக்கு வந்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் துரைராஜ் கொடுத்த புகாரின் பேரில், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுப்பது, ஆயுதத்தால் தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கவுதம் மீது போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்