திருச்சி சிவா எம்.பி.யின் மகன் வீட்டில் கல்வீச்சு; போலீசில் புகார்
திருச்சி சிவா எம்.பி.யின் மகன் வீட்டில் கல்வீச்சு தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
சோமரசம்பேட்டை, ஜூலை.23-
தி.மு.க.ைவ சேர்ந்த திருச்சி சிவா எம்.பி.யின் மகன் சூரிய சிவா திருச்சி வாசன்நகரில் வசித்து வருகிறார். இவர் பா.ஜ.க.வில் இணைந்துள்ளார். இந்நிலையில் சூரியசிவா தன்னிடம் டிரைவராக பணிபுரிந்த தி.மு.க.வை சேர்ந்த சாகுல் ஹமீது என்பவரை வேலையில் இருந்து நீக்கிவிட்டு புதியதாக ஆனந்த் என்பவரை பணி அமர்த்தினார். இந்த நிலையில் சூரியசிவா வீட்டில் 4 பேர் கொண்ட கும்பல், கற்கள் மற்றும் கம்புகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் டிரைவர் ஆனந்த் பலத்த காயம் அடைந்து திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது குறித்து சோமரசம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதில் டிரைவர் பணியில் இருந்து நீக்கியதால் சாகுல் ஹமீது தனது நண்பர்கள் 4 பேருடன் வந்து கல் வீச்சு தாக்குதலில் ஈடுபட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.