செல்போன் பறிப்பு
திருச்சி கம்பரசம்பேட்டை பெரியார் நகர் கீழ தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகன் பாலமுருகன் (18). இவர் திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் ஒரு நகைக்கடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 மர்ம ஆசாமிகள் அவரை தாக்கி, செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாட்டரி கஞ்சா விற்பனை
*திருச்சி எடமலைப்பட்டி புதூர், ஏர்போர்ட் காவல் நிலையப் பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, கஞ்சா விற்றதாக ராம்ஜி நகரை சேர்ந்த விஸ்வநாதன், கே.கள்ளிக்குடியை சேர்ந்த தீனதயாளன், ஏர்போர்ட் பகுதியைச் சேர்ந்த பட்டாபி ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் திருச்சி ஏர்போர்ட், ஸ்ரீரங்கம், கோட்டை, காந்தி மார்க்கெட் ஆகிய பகுதிகளில் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்றதாக முகம்மது அன்வர், கணேசன், ரமேஷ், சங்கர், குட்டி முனீஸ்வரன், அருண்குமார் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்..
பெண் தற்கொலை
*திருச்சி உறையூர் மேல பாண்டமங்கலம் அரவானூர் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி சுஜாதா (55). மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட இவர் சென்னை மற்றும் கரூர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் வீட்டுக்கு வந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடையாளம் தெரியாத முதியவர் சாவு
*திருச்சி அரசு மருத்துவமனை ஐ.எம்.சி.யு. வார்டு வளாகத்தில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாகக் கிடந்தார். அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது குறித்து அரசு மருத்துவமனை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி
*மண்ணச்சநல்லூர் அருகே உள்ள புக்காத்துரை பகுதியைச் சேர்ந்தவர் சிங்காரம் (60). விவசாயியான இவர் நேற்று முன்தினம் வீட்டு மின்சார பெட்டியில் பியூஸ் பழுதடைந்ததால் அதனை சரி செய்ய முயன்றார். இதில் தூக்கி வீசப்பட்ட அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிங்காரம் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வாத்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆர்ப்பாட்டம்
*மணப்பாறை பஸ் நிலையம் அருகே ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் சார்பில் மாவட்ட துணை செயலாளர் நைனா முகமது தலைமையில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அந்த அமைப்பினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வீட்டில் மது விற்பனை
*திருவெறும்பூரையடுத்த கக்கன் காலனி மாதா கோவில் தெருவை சேர்ந்த கணேசன் மனைவி கலா (46), சுப்பிரமணியன் மனைவி சாந்தா (68). இவர்கள் வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்றதாக திருவெறும்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.