திருச்சி ஐ.டி. ஊழியர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

திருச்சி ஐ.டி. ஊழியர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்பு உள்ளதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-02-15 19:02 GMT

திருச்சி ஐ.டி. ஊழியர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்பு உள்ளதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று காலை முதல் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளில் இந்த சோதனை நடத்தப்படுகிறது. அதன்படி, திருச்சி, சென்னை, கோவை உள்பட 60 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதன் ஒரு பகுதியாக திருச்சி பீம நகரில் உள்ள சேக் தாவூத் (வயது 34) என்பவரது வீட்டில் என்.ஐ.ஏ. இன்ஸ்பெக்டர் ஹரி ஓம் தலைமையில் விசாரணை நடத்தினர். காலை 6 மணி முதல் இந்த சோதனை நடத்தப்பட்டது.

ஏற்கனவே சேக்தாவூத் கே.கே. நகரில் குடியிருந்து வந்தார். தற்போது கடந்த 2 மாதங்களாக பீமநகரில் உள்ள நியூ ராஜா காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது மனைவி 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். தற்போது சேக் தாவூத் வீட்டில் இருந்தபடியே பணிபுரிந்து வருகிறார். மேலும் சேக் தாவூத் மதமாற்றம் செய்வதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என கூறப்படுகிறது.

இந்த சோதனை குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் கூறியதாவது:- கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் இறந்த ஜமேஷா முபீன் (29), சேக் தாவூத் ஆகியோர் சென்னையில் உள்ள அரபிக் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள்.

3 மடிக்கணினியை கைப்பற்றினர்

இதை தொடர்ந்து சேக் தாவூதுக்கும் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருக்கிறதா? என்ற அடிப்படையில் நேற்று காலை 6 மணி முதல் மதியம் 1.30 மணி வரை இந்த சோதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து 7½மணி நேரம் நடந்த இந்த சோதனையில் சேக் தாவூத்தின் 3 மடிக்கணினி, 2 செல்போன், 1 பென்டிரைவ், 3 அரபி மொழி புத்தகம் உள்ளிட்டவைகளை கைப்பற்றி உள்ளனர். மேலும் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்