உண்டியலை உடைத்து பணம் திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
காணிக்கை பணம் திருட்டு
திருச்சியை அடுத்த தீரன் நகர் பகுதியில் விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷே கவிழாவை முன்னிட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கடந்த 2-ந்தேதி நள்ளிரவு மர்ம நபர்கள் விநாயகர் கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடிக் கொண்டு ஓடி விட்டனர்.
இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் சோமரசம்பேட்டை போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியலை உடைத்து பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் அந்தப் பகுதியில் குடியிருப்பவர்களின் வீடுகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து திருடர்களை போலீசார் அடையாளம் கண்டனர். இதுதொடர்பாக கருமண்டபம் பகுதியை சேர்ந்த சிவானந்தம், சந்தோஷ், அமர்நாத், கார்த்திகேயன் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
கொலை மிரட்டல்
*உப்பிலியபுரத்தை அடுத்த வைரிசெட்டிப்பாளையம் மேற்கு குறும்பர் தெருவைச் சேர்ந்தவர் மகேந்திரன் (43). இவரை உப்பிலியபுரம் காளிவட்டத்தைச் சேர்ந்த பாலகுமார் (34) என்பவர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலகுமாரை கைது செய்தனர்.
ஆடு திருடியவர் கைது
*தொட்டியம் அருகே உள்ள பாப்பாபட்டி மேலகொட்டம் கிராமத்தை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி சுமதி (43). விவசாயியான இவர், ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்றுவிட்டு இரவில் கொட்டகையில் அடைத்து வைத்து இருந்தார். இந்த நிலையில் கொட்டகைக்குள் புகுந்து முசிறியை சேர்ந்த மனோஜ்குமார் (30) என்பவர் ஆட்டை திருடிச் சென்றார். இது குறித்த புகாரின் பேரில் தொட்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனோஜ்குமாரை கைது செய்தனர்.
தாயை தாக்கிய மகன் கைது
*உப்பிலியபுரம் செக்கார தெருவை சேர்ந்தவர் சசிகலா (41). இவரது மகன் ராஜ்குமார். இவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி இருந்துள்ளார். இந்த நிலையில் இவர் தாயிடம் பணம் கேட்டுள்ளார். அவர் கொடுக்காததால் செங்கலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இது குறித்த புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர்.
20 பெட்டி பட்டாசுகள்பறிமுதல்
*மணப்பாறை காந்தி நகரில் பாபு (63) என்பவர் பட்டாசு கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவர் உரிமம் முடிந்தபிறகும் பட்டாசு விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து 20 பெட்டி பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.