திருச்சி மாவட்ட செய்தி சிதறல்

திருச்சி மாவட்ட செய்தி சிதறல்

Update: 2023-07-19 19:26 GMT

கிணற்றுக்குள் தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

தொழிலாளி

திருவெறும்பூர் அருகே உள்ள மேல களமலை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 45). விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி பத்மா. நேற்று முன்தினம் குமார் அரியமங்கலம் பகுதியில் உள்ள கிணற்றின் மேல் அமர்ந்து இருந்தார்.

அப்போது, குமார் எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்தார். இதை கண்ட அப்பகுதியினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண்ணை தாக்கியவர் கைது

*திருச்சி கம்பரசம்பேட்டை அருகே உள்ள முருகங்கபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சிவனேசன். இவர் ரேஷன் கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சங்கீதா (37). கூலி தொழிலாளி. இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த கருணாநிதி என்பவருக்கும் செல்போன் திருட்டு போனது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கருணாநிதி மற்றும்அவருடைய மகன் பிரவீன் ஆகியோர் பிளாஸ்டிக் துடைப்பத்தால் சங்கீதாவை தாக்கினராம். இது குறித்த புகாரின் பேரில் ஜீயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருணாநிதியை கைது செய்தனர்.

ஆர்ப்பாட்டம்

*திருச்சி மாநகராட்சி சி.ஐ.டி.யு. தொழிலாளர் சங்கத்தினர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் இளையராஜா தலைமை தாங்கினார். திருச்சி மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு கலெக்டர் தீர்மானித்த ஒப்பந்த கூலியை வழங்காத ஒப்பந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், 8 மணி வேலை நேரத்தை உறுதிப்படுத்தக் கோரியும் ஆர்ப்பாட்டத்தின்போது கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ரூபாய் நோட்டுகள் எரிந்தன

*திண்டுக்கல்லை சேர்ந்த ஒருவர் திருச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர் மோட்டார் சைக்கிளில் ஒரு பையில் சுமார் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப்பணத்தை வைத்து தொங்க விட்டு சென்றதாக கூறப்படுகிறது. திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வையம்பட்டி மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது பையில் இருந்த ரூபாய் நோட்டுகள் எரிந்தன. இதை கண்ட அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி பையை எடுத்து தீயை அணைத்தார். எனினும் இதில் ரூ.25 ஆயிரம் எரிந்து நாசமாயின. மற்ற ரூபாய் நோட்டுகள் தப்பியது.

Tags:    

மேலும் செய்திகள்