அ.தி.மு.க.வில் தொண்டர்கள் ஆதரவு யாருக்கு என்பதை திருச்சி மாநாடு தீர்மானிக்கும் - பண்ருட்டி ராமச்சந்திரன்
அ.தி.மு.க.வில் தொண்டர்கள் ஆதரவு யாருக்கு என்பதை திருச்சி மாநாடு தீர்மானிக்கும் என்று அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.
முப்பெரும் விழா மாநாடு
திருச்சி பொன்மலை ஜி.கார்னர் மைதானத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா பிறந்த நாள் விழா, அ.தி.மு.க. தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவு விழா என முப்பெரும் விழா மாநாடு நாளை(திங்கட்கிழமை) மாலை நடக்கிறது. இந்த மாநாட்டுக்கான அரங்கம் அமைக்கும் பணியை அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் பார்வையிட்டார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தொண்டர்கள் தான் வாரிசு
அ.தி.மு.க.வில் ஒருங்கிணைந்து செயல்படுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒருமுறை எம்.ஜி.ஆரிடம் உங்கள் அரசியல் வாரிசு யார் என்று நிருபர்கள் கேட்டபோது, அ.தி.மு.க.வின் தொண்டர்கள் தான் என் அரசியல் வாரிசு என்றார். அந்த வழியில் தொண்டர்களை அழைத்து உங்கள் இயக்கத்தை நீங்களே நடத்துங்கள் என்று கூறுவதற்கு தான் இந்த மாநாடு. ஒரு சிலர் பொதுக்குழுவை அவர்களே நியமித்து தலைமை கழக நிர்வாகிகளை நியமித்தனர். அது இட்டுக்கட்டிய சிறு கும்பல். அவர்களுக்கும் இந்த இயக்கத்துக்கும் சம்பந்தமில்லை.
அ.தி.மு.க. இயக்கம் என்பது தனித்தன்மை வாய்ந்தது. கட்சியில் பிளவு ஏற்படுகிறபோது, தொண்டர்கள் தான் பொதுச்செயலாளரையோ, ஒருங்கிணைப்பாளரையோ தேர்ந்தெடுக்க முடியும். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுபவரை பொதுக்குழு கட்டுப்படுத்த முடியாது. ஒருங்கிணைப்பாளருக்கு முரணாக செயல்பட்டால் பொதுக்குழுவை கலைக்க ஒருங்கிணைப்பாளருக்கு அதிகாரம் உள்ளது.
எம்.ஜி.ஆரைவிட செல்வாக்கு
அ.தி.மு.க.வின் சட்டவிதிகளை புரிந்து கொள்ளாமல் நீதிபதிகள் தீர்ப்பு வழங்குகிறார்கள். அவர்களுக்கு புரிய வைக்கும் அளவுக்கு எங்களுக்கு சக்தி இல்லையோ என்ற சந்தேகம் எங்களுக்கு இருக்கிறது. எம்.ஜி.ஆரே பொதுக்குழுவினால் பாதிக்கப்பட்டுள்ளார். அப்போது 184 எம்.எல்.ஏ.க்கள் இருந்தபோது, அவருடன் ஒரே ஒரு எம்.எல்.ஏ. தான் வந்தார். அதனால் தான் நான் ஓ.பன்னீர்செல்வத்திடம், 'உங்களுடன் 3 எம்.எல்.ஏக்கள் வந்துள்ளார்கள். அதனால் நீங்கள் எம்.ஜி.ஆரோடு 3 மடங்கு செல்வாக்கு உள்ளவர்' என்று கூறினேன்.
அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகம் எம்.ஜி.ஆருக்கு ஜானகி கொடுத்தது. அது எடப்பாடி பழனிசாமிக்கு சொந்தமானதல்ல. அந்த கட்டிடத்தில் உள்ள ஒவ்வொரு செங்கல்லும் அ.தி.மு.க.வின் ஒவ்வொரு தொண்டர்களுக்கும் உரியது. திருச்சியில் நாளை (இன்று) நடைபெறும் மாநாட்டில் சசிகலா மற்றும் தினகரன் பங்கேற்பு குறித்து தற்போது உறுதியாக எதுவும் கூற முடியாது.
மக்கள் ஆதரவு
அ.தி.மு.க.வில் தொண்டர்களின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிறதா, ஓ.பன்னீர்செல்வத்துக்கு இருக்கிறதா என்பதை இந்த மாநாட்டின் மூலம் தெரிந்து கொள்வீர்கள். எடப்பாடி பழனிசாமி தரப்பினர் எங்கள் மாநாட்டுக்கு மட்டுமல்ல, அ.தி.மு.க.வுக்கே முட்டுக்கட்டையாக இருக்கிறார்கள். ஒரு கட்சி இயங்குவதற்கு தொண்டர்களும், கட்சியின் எதிர்காலத்துக்கு மக்கள் ஆதரவும் முக்கியம். இது இரண்டும் இல்லையென்றால் திண்ணையில் அமர்ந்து தான் அரசியல் செய்ய முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.