இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த 21 பேருக்கு அஞ்சலி

பா.ம.க. சார்பில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த 21 பேருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

Update: 2022-09-18 16:04 GMT

வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக்கோரி பா.ம.க. சார்பில் கடந்த 1987-ம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் உயிரிழந்த 21 பேரின் நினைவாக செப்டம்பர் 17-ந் தேதி தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இதையொட்டி திருவண்ணாமலை காந்திசிலை அருகில் உயிர்தியாகம் செய்தவர்களின் உருவ படங்களுக்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் ஏந்தல் பெ.பக்தவச்சலம் தலைமையில் வீரவணக்க நிகழ்ச்சி மற்றும் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.

வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் நாராயணசாமி, மாவட்ட தலைவர் பெரியசாமி, மாவட்ட பொருளாளர் வீரம்மாள் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் செல்வகுமார் கலந்து கொண்டு உயிர்தியாகம் செய்தவர்களின் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து அவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தியபடி காந்திசிலையிலிருந்து அமைதியாக ஊர்வலமாக சென்று மாடவீதியை சுற்றி மீண்டும் காந்திசிலையை வந்தடைந்தனர்.

பின்னர் அவர்கள் தமிழகத்தில் வருகிற 2026-ம் ஆண்டு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸை முதல்- அமைச்சராக்க பா.ம.க.வினர் களப்பணியாற்ற வேண்டுமென உறுதிமொழி ஏற்றனர்.

நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் காளிதாஸ், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் சு.பாபுகண்டர், பழமண்டி செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் திருவண்ணாமலை நகர செயலாளர் செ.பத்மநாபநாயுடு நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்