கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் பழங்குடியின பெண்கள் தர்ணா
இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கக்கோரி கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் பழங்குடியின பெண்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
குழந்தைகளுடன் தர்ணா
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வாராந்திர பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் கலந்து கொண்டு மனு அளிப்பதற்காக திட்டக்குடி அருகே ராமநத்தம் மேட்டுத்தெருவை சேர்ந்த பழங்குடியின வகுப்பான இந்து மலைக்குறவன் சமூகத்தை சேர்ந்த பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்தனர்.
பின்னர் அவர்கள் திடீரென மனுக்கள் பதியும் இடத்திற்கு அருகில் குழந்தைகளுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த புதுநகர் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அவர்கள் ராமநத்தம் மேட்டுத்தெருவில் குப்பை கொட்டும் இடத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக குடிசை அமைத்து வாழ்ந்து வருகிறோம்.
மனைப்பட்டா வழங்க வேண்டும்
வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கும் நாங்கள், பேரிடர் காலங்களில் மிகவும் கஷ்டப்பட்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறோம். இதனால் நாங்கள் எங்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என்று, அப்போதைய மாவட்ட கலெக்டர், விருத்தாசலம் சப்-கலெக்டர், திட்டக்குடி தாசில்தார் ஆகியோரிடம் பல முறை மனு அளித்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பழங்குடியின வகுப்பான இந்து மலைக்குறவன் சமூகத்தை சேர்ந்த நாங்கள் விவசாய கூலி வேலை செய்து தான் பிழைப்பு நடத்தி வருகிறோம். எங்களுக்கு வேறு எங்கும் இடம் கிடையாது. எங்கள் குடும்பத்தில் யாரும் அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கவில்லை. ராமநத்தம் காந்திநகரில் பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது. ஆகவே அதில் எங்களுக்கும் இலவச மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
பரபரப்பு
இதை கேட்ட போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கலெக்டரிடம் மனு அளிக்குமாறு கூறி அழைத்துச் சென்றனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அருண்தம்புராஜிடம் மனு அளித்தனர். அவர் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இருப்பினும் இந்த போராட்டத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.