கூடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை ஆதிவாசி மக்கள் முற்றுகையிட முயற்சி

தொகுப்பு வீடுகள் கட்டும் பணியை விரைவாக முடிக்க கோரி கூடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை ஆதிவாசி மக்கள் முற்றுகையிட முயற்சி செய்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-06-13 15:05 GMT

கூடலூர்,

தொகுப்பு வீடுகள் கட்டும் பணியை விரைவாக முடிக்க கோரி கூடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை ஆதிவாசி மக்கள் முற்றுகையிட முயற்சி செய்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விரைவாக முடிக்க கோரிக்கை

கூடலூர் பகுதியில் ஆதிவாசி கிராமங்களில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் செலவில் தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலான இடங்களில் கட்டுமான பணிகள் முழுமை பெறவில்லை. இதனால் ஆதிவாசி மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். கூடலூர் அருகே ஸ்ரீமதுரை ஊராட்சியில் மேலம்பலம், கொரவயல், குண்டூர், ஓடக்கொல்லி ஆகிய கிராமங்களில் தொகுப்பு வீடுகள் கட்டும் பணி பாதியில் நிற்கிறது.

தற்போது மழைக்காலம் தொடங்க உள்ளதால் விரைவாக வீடுகளை கட்டி தர வேண்டும் என ஆதிவாசி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்தநிலையில் நேற்று தொகுப்பு வீடுகள் கட்டும் பணியை விரைவாக முடிக்க கோரி கூடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை ஆதிவாசி மக்கள் முற்றுகையிடும் போராட்டம் நடத்த முயற்சி செய்தனர். இதை அறிந்த கூடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் தலைமையிலான போலீசார் விரைந்து வந்த ஆதிவாசி மக்களை தடுத்து நிறுத்தினர்.

போராட்டம்

தொடர்ந்து தாசில்தார் அலுவலகம் முன்பு ஆதிவாசி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் சி.கே.மணி தலைமை தாங்கினார். நிர்வாகி சுரேஷ் வரவேற்றார். நிர்வாகிகள் வர்க்கீஸ், யோகசசி, ராதாகிருஷ்ணன், தாசன், கார்லஸ் ஆகியோர் பேசினர். போராட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆதிவாசி மக்கள் கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் ஆர்.டி.ஓ., தாசில்தாரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இது குறித்து ஆதிவாசி மக்கள் கூறும்போது, தொகுப்பு வீடுடன் கழிப்பறையும் முறையாக கட்டவில்லை. ஏற்கனவே, வசித்து வந்த பழுதடைந்த வீடுகளை அகற்றிவிட்டு புதிய வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டது. விரைவாக பணி நடைபெறாததால் மழையில் குடும்பத்துடன் நனையும் நிலை தொடர்கிறது என்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்