தச்சமலையில் பழங்குடி மக்கள் ஆர்ப்பாட்டம்
முத்துக்குழிவயல் வனப்பகுதியில் அரிக்கொம்பன் யானை விடப்பட்டதை எதிர்த்து பேச்சிப்பாறை அருகே உள்ள தச்சமலையில் பழங்குடி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குலசேகரம்:
முத்துக்குழிவயல் வனப்பகுதியில் அரிக்கொம்பன் யானை விடப்பட்டதை எதிர்த்து பேச்சிப்பாறை அருகே உள்ள தச்சமலையில் பழங்குடி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரிக்கொம்பன் யானை
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் பகுதியில் சுற்றித்திரிந்த அரிக்கொம்பன் யானை கேரள வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு தமிழக-கேரள எல்லையில் உள்ள பெரியார் புலிகள் காப்பக பகுதியில் விடப்பட்டது. பின்னர் அந்த யானை தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மலைப்பகுதி வழியாக கம்பம் நகருக்குள் புகுந்து வலம் வரத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் அதை லாரியில் ஏற்றி பலத்த பாதுகாப்புடன் நேற்று முன்தினம் அப்பர் கோதையாறில் முத்துக்குழிவயல் அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர். முத்துக்குழிவயலில் பெரும்பாலான பகுதி குமரி வனப்பகுதியை சேர்ந்தது.
இ்ந்தநிலையில் அரிக்கொம்பன் யானையை முத்துக்குழிவயல் வனப்பகுதியில் விட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பேச்சிப்பாறை அருகே உள்ள தச்சமலை பழங்குடி மக்கள் தச்சமலை தொடக்கப்பள்ளி முன்பு நேற்று காலையில் திடீரென திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதியில் அரிக்கொம்பன் யானை விடப்பட்டதை எதிர்த்து கோஷம் எழுப்பினர்.
பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூறும்போது 'முத்துக்குழிவயல் பகுதியில் விடப்பட்ட அரிக்கொம்பன் யானை கீழ்கோதையாறு, மோதிரமலை, தச்சமலை உள்ளிட்ட பழங்குடி கிராமங்களில் வந்து அட்டகாசம் செய்ய வாய்ப்புள்ளது. இதனால் பழங்குடி மக்கள் பீதியில் உள்ளனர். எனவே யானையை அது நடமாடிய கேரள வனப்பகுதியில் விடுவதே பொருத்தமாக இருக்கும். குமரி மாவட்டத்தில் வனத்தில் வாழும் பழங்குடி மக்களுக்கும், வனத்தையொட்டி வாழும் மக்களுக்கும் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதி படுத்த வேண்டும்' என்றனர்.
போராட்டத்தில் ஆண்கள், பெண்கள் என பழங்குடி மக்கள் பலர் கலந்து கொண்டனர்.