பலத்த மழையால் மரங்கள், டிரான்ஸ்பார்மர் சாய்ந்தன.

பலத்த மழையால் மரங்கள், டிரான்ஸ்பார்மர் சாய்ந்தன.

Update: 2022-06-16 20:53 GMT


மதுரை திருப்பரங்குன்றம், திருமங்கலம், பேரையூர் பகுதியில் பெய்த பலத்த மழையால் மரங்கள், டிரான்ஸ்பார்மர் சாய்ந்தன. மேலும் மரங்கள் விழுந்ததில் பள்ளி கட்டிங்கள் சேதம் அடைந்தன.

கனமழை

திருப்பரங்குன்றம் அருகே பெரிய ஆலங்குளம் ஊராட்சி பகுதியில் நேற்று முன்தினம் இரவில் இடி, மின்னல், சூறாவளி காற்றுடன் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. இந்த நிலையில் அங்குள்ள தொடக்கப்பள்ளிக்குள் இருந்த 3 மரங்கள் வேரோடு சாய்ந்து பள்ளி சுவற்றின் மேல் விழுந்தது. அதில் சுவர் சேதமடைந்தது. இரவு நேரத்தில் மரம் முறிந்தால் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளுக்கு பாதிப்பு இல்லை. பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர் உதயகுமார், பெரிய ஆலங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பையா ஆகியோர் பள்ளி கட்டிடங்களை பார்வையிட்டு வேரோடு சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியை துரிதப்படுத்தினர். மேலும் சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை சீரமைக்கவும் ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர்.

டிரான்ஸ்பார்மர்

பேரையூரில் நேற்று மாலை பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இந்த சூறாவளி காற்றால் பேரையூர்-உசிலம்பட்டி சாலையில் உள்ள சிறிய டிரான்ஸ்பார்மர் உடைந்து கீழே விழுந்து சேதம் அடைந்தது. இதனால் பேரையூரில் மின்தடை ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து அறிந்த பேரையூர் மின்சார வாரிய அலுவலர்கள் டிரான்ஸ்பார்மர் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். டிரான்ஸ்பார்மர் கீழே விழுந்த நிலையில் அருகில் யாரும் இல்லாததால் சேதம் ஏற்படவில்லை.

திருமங்கலம்

மேலும் திருமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை இடி, மின்னலுடன் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. கடுமையான காற்றுடன் மழை பெய்ததால் சில இடங்களில் மரங்கள் முறிந்து கீழே விழுந்தன. திருமங்கலம் அருகே பெரிய ஆலங்குளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அருகே இருந்த மரம் முறிந்து பள்ளிக் கட்டிடத்தின் மீது விழுந்தது.

இரவு நேரம் என்பதால் ஆசிரியர்கள், மாணவர்கள் யாரும் பள்ளியில் இல்லை. இதனால் பெரிய அளவில் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. நேற்று காலை இந்த கட்டிடத்தின் பின்புறம் பகுதியில் உள்ள வேறு கட்டிடத்தில் வழக்கம் போல் பள்ளி வகுப்பு செயல்பட்டது. முறிந்து விழுந்த மரங்களை ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.

இதேபோல் மதுரை நகர் பகுதியிலும் பலத்த மழை பெய்தது. இதனால் நகரின் தாழ்வான பகுதியில் மழை குளம் போல் தேங்கி நின்றது. காமராஜர் சாலை, கூடலழகர் பெருமாள் கோவில் செல்லும் சாலைகளில் மழைநீர் அதிக அளவில் தேங்கியது.

Tags:    

மேலும் செய்திகள்