அலமேலுமங்காபுரம் காப்புக்காட்டில் நகர்வன திட்டத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
அலமேலுமங்காபுரம் காப்புக்காட்டில் நகர்வன திட்டத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
வேலூர் மாவட்ட வனத்துறை சார்பில் நகர்வன திட்டத்தில் மரக்கன்றுகள் நடும் தொடக்க நிகழ்ச்சி அலமேலுமங்காபுரம் தீர்த்தகிரி முருகன் கோவில் அருகே காப்புக்காட்டில் நேற்று நடந்தது. ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ., வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, மாவட்ட வன அலுவலர் பிரின்ஸ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சிக்கு வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கி மரக்கன்று ஒன்றை நட்டு திட்த்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அங்கு பல்வேறு வகையான 75 மரக்கன்றுகள் நடப்பட்டன.
நகர்வன திட்டத்தில் அலமேலுமங்காபுரம் காப்புக்காட்டில் 20 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அங்கு ரூ.2 கோடி மதிப்பில் குழந்தைகள் பூங்கா, தியான மண்டபம், இயற்கை அழகை ரசிக்கும் வகையில் வியூ பாயிண்ட் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளது என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில், வேலூர் உதவி கலெக்டர் பூங்கொடி, வேலூர் வனச்சரகர் ரவிக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.