தைல மரங்களை வனத்துறையினர் வளர்க்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு

ஐகோர்ட்டு உத்தரவை மீறி தைல மரங்களை வனத் துறை யினர் வளர்க்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

Update: 2022-10-26 17:44 GMT

காரைக்குடி, 

ஐகோர்ட்டு உத்தரவை மீறி தைல மரங்களை வனத் துறை யினர் வளர்க்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

நிலத்தடி நீர்

ஆஸ்திரேலியாவை தாயகமாக கொண்டது யூகலிப்டஸ் எனும் தைல மரம். இவை மிர்டே ஷியா என்னும் தாவர வகையை சார்ந்தது. இவற்றில் 700 வகைகள் உண்டு பல மரங்கள் 33 அடியில் இருந்து 200 அடி உயரம் வரை வளரும். சில வகை மரங்கள் 300 அடிக்கு மேலாக வளரும். காட்டுத் தீயில் சிக்கினாலும் தானாக நிலத்தடி நீரை உறிஞ்சி உயிர்த்தெழும்.

இவ்வகை மரங்கள் 1843-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. யூகலிப்டஸ் மரங்கள் உள்ள இடத்தில் மற்ற தாவரங்கள் உயிர் வாழ முடியாது. நிலத்தடி நீரை அதிக அளவில் உறிஞ்சும் தன்மை கொண்டது. நீர் நிலைகளில் இந்த மரங்களை வளர்த்தால் அவை விலை நிலங்களாக, மனை இடங்களாக மாறி விடும். இதையடுத்து இதனை வளர்க்க ஐகோர்ட்டு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

விவசாயம் பாதிப்பு

இந்தநிலையில் கல்லல் ஒன்றிய பகுதி மக்களுக்கு புதிய பிரச்சினை உருவாகி உள்ளது. வனத்துறை சார்பில் யூகலிப்டஸ் மரங்கள் அப்பகுதிகளில் வளர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதனால் வனப்பகுதியில் உள்ள நீர் ஆதாரம் பெரிதும் பாதிக்கப்படுவதோடு விவசாயமும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டது. இப்பகுதியின் வனப்பகுதியில் உள்ள குரங்கு, மான், மயில் போன்ற உயிரினங்கள் வனப்பகுதியில் வாழ முடியாமல் வேறு வழியின்றி மக்கள் வசிப்பிடங்களில் புகுந்து வீடுகளில் உள்ள பொருட்கள், விவசாயம் ஆகியவற்றை சேதப்படுத்தியது.

இதுகுறித்து அப்போதைய மாவட்ட கலெக்டரிடம் அப்பகுதி மக்கள் முறையிட்டு ஐகோர்ட்டின் தடை உத்தரவினையும் சமர்ப்பித்தனர். அதனையொட்டி அப்போதைய மாவட்ட கலெக்டர் வனத்துறையினர் கல்லல் ஒன்றியப்பகுதிகளில் யூகலிப்டஸ் தைல மரங்களை வளர்க்க தடை விதித்தார். அதற்கு பதிலாக வனத்துறையினர் முந்திரி மரங்களை வளர்த்தனர்.

புகார் மனு

பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டது. தற்போது மீண்டும் வனத்துறையினர் கல்லல் ஒன்றியபகுதிகளில் யூகலிப்டஸ் மரங்களை வளர்க்க முயற்சி மேற் கொண்டு வருவதாக கிராமமக்கள் புகார் கூறுகின்றனர். இதற்கு கல்லல், பொய்யலூர், கூத்தலூர், எஸ்.ஆர். பட்டினம், கல்லுப்பட்டி பகுதிளை சேர்ந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதுகுறித்து காரைக்குடி தாசில்தார் மாணிக்கவாசகத்திடம் புகார் மனு அளித்துள்ளனர்.

மேலும் ஐகோர்ட்டு உத்தரவை மீறி வனத்துறையினர் யூகலிப்டஸ் மரங்களை வளர்க்க முயன்றால் மக்களை திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்றும் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்