உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
நாமக்கல்:
நாமக்கல் ஜவகர் சிறுவர் மன்றம், மாவட்ட கலை பண்பாட்டுத்துறை, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் நேரு யுவகேந்திரா ஆகியவை இணைந்து உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பூமியை காக்கும் பசுமை திருவிழா, மாணவர்கள் வரைந்த ஓவிய கண்காட்சி ஆகியவற்றை நாமக்கல் கோட்டை நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் நடத்தின. நிகழ்ச்சிக்கு ஜவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலர் தில்லை சிவக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு வக்கீல் சதீஷ்குமார், நாமக்கல் கவிஞர் சிந்தனை பேரவை தலைவர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் மாணவ, மாணவிகள் வரைந்த ஓவியங்களின் கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. இதை பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். குறிப்பாக சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஓவியம் பார்வையாளர்களை கவர்ந்தது. தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.