முன்பதிவு செய்த பெட்டிகளில் சாதாரண டிக்கெட்டில் பயணம்: ரெயில்களில் வடமாநில தொழிலாளர்கள் தொல்லை-பயணிகள் அதிருப்தி
ரெயில்களில் முன்பதிவு செய்த பெட்டிகளில் சாதாரண டிக்கெட்டில் பயணம் செய்யும் வடமாநில தொழிலாளர்கள் தொல்லை கொடுத்து வருவதால் யணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டுக்கு தினமும் வட மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். சென்னை, மதுரை, திருச்சி போன்ற பெரிய நகரங்கள் முதல், குக்கிராமங்கள் வரை அவர்கள் ஊடுருவி விட்டார்கள். பெரிய நிறுவனம் என்றாலும் சரி, சிறியதாக இருந்தாலும் சரி, அங்கிங்கெனாதபடி எங்கும் வேலை செய்கிறார்கள்.
ஒரு சிறு டீக்கடையை எடுத்துக் கொண்டாலும் கல்லாவில் இருப்பவரைத் தவிர, பலகாரங்கள் போடுவது, டீப்போடுவது, கிளாசுகளை கழுவுவது வரை அவர்களாகத்தான் இருக்கிறார்கள். அவர்கள் கடும் உழைப்பாளிகள். மறுப்பதற்கு இல்லை. ஆனால் அதற்கு இணையாக உழைக்கத் தெரிந்த நம்மவர்கள் என்ன ஆனார்கள்?
இலவசங்களால் கொஞ்சம் வயிற்றில் பசியாறிப் போவதால், சோம்பேறி ஆனார்கள். விளைவு நாம் செய்ய வேண்டிய வேலைகளை, வடமாநிலத்தார் வந்து செய்கிறார்கள். கல்லாவை நம்மிடம் அவர்கள் கைப்பற்றாமல் இருந்தால், சரி.
தொல்லைகள்
அதேநேரம் வடமாநில தொழிலாளர்களின் அதிக வரவால் நமக்கு பல்வேறு வேலைகள் நடந்தாலும் தொல்லைகளும் இருக்கத்தான் செய்கின்றன. எடுத்துக்காட்டாக சொல்வது என்றால், ரெயில் பயணங்களில் அவர்களின் செயல்கள் நம்மை எரிச்சல் அடைய செய்கின்றன. பலர் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வது, வகுப்பு மாறி பயணம் செய்வது, சாதாரண டிக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு முன்பதிவு செய்த பெட்டிகளில் புகுந்து பயணம் செய்வது, பாக்குகளை வாயில் போட்டு குதப்பி கண்ட, கண்ட இடங்களில் உமிழ்வது, குற்றச் செயல்களில் ஈடுபடுவது போன்ற சட்டவிரோதச் செயல்களை அச்சம் இல்லாமல் செய்கிறார்கள்.
இதுபற்றி பல்வேறு தரப்பினர் வெளியிட்டு இருக்கும் கருத்துகள் வருமாறு:-
ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை
சேலம் மஜ்ராகொல்லப்பட்டியை சேர்ந்த குருபாலன்:-
முன்பதிவு செய்த பெட்டிகளில் உள்ள படுக்கைகளில் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் அமர்ந்து கொண்டு எழுந்திருக்க சொன்னால் அவர்கள் கேட்பதில்லை. இதற்கு மொழியும் தடையாக இருக்கிறது. ரிசர்வேசன் பெட்டியில் முன்பதிவு செய்தவர்களை தவிர மற்றவர்கள் பயணம் செய்யக்கூடாது என்று ஒலிபெருக்கி மூலம் அறிவிக்க வேண்டும். ரெயில்வே நிர்வாகத்தின் குளறுபடியால் இதுபோன்ற பிரச்சினை ஏற்படுகிறது. குறிப்பாக வாயில் போதை பாக்குகளை போட்டுவிட்டு ஜன்னல்களில் உமிழ்ந்து அசிங்கப்படுத்துவதுடன், சுற்றுப்புறத்தை சுகாதாரம் இல்லாமல் செய்கின்றனர். ரெயில்வே போலீசார் ரெயிலில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். ரெயில்வேயின் தாரக மந்திரமான சுத்தம், பாதுகாப்பு, நேரம் தவறாமை போன்றவற்றை பயணிகளுக்கு முறையாக கிடைக்க ரெயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பயணிகளுக்கு மனஉளைச்சல்
முன்னாள் தென்னக ரெயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் சி.பி.வைத்திலிங்கம்:-
முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் சாதாரண வகை டிக்கெட் எடுத்துக்கொண்டு சிலர் முன்பதிவு பெட்டிகளில் அமர்ந்து கொள்கிறார்கள். இதனால் முன்பதிவு செய்தவர்கள் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாக வேண்டியுள்ளது. குறிப்பாக வட மாநிலத்தை சேர்ந்தவர்கள், ரெயிலில் முன்பதிவு பெட்டிகளில் ஏறி அமர்ந்து கொண்டு அடாவடி செய்கிறார்கள். முன்பதிவு செய்ய பெட்டிகளில் சாதாரண டிக்கெட் எடுத்து பயணிகள் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு அபராத தொகையுடன் கூடிய தண்டனை கடுமையாக வழங்க வேண்டும். அப்போது தான் இதுபோன்ற தவறுகள் நடக்காது. டிக்கெட் பரிசோதிக்கும் ஆய்வாளர்கள், ரெயில் ஒவ்வொரு நிலையத்திலும் நின்று புறப்படும் போது ஒவ்வொரு முறையும் பெட்டிகளுக்கு வந்து பதிவு செய்தவர்கள் அமர்ந்திருக்கிறார்களா? என்று பரிசோதிப்பது மிகவும் சிறந்தது. முன்பதிவு செய்த பயணிகள் நிம்மதியாகவும், பாதுகாப்போடு பயணம் மேற்கொள்ள ரெயில்வே துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
நிம்மதி இழந்து பயணம்
சேலம் ஆண்டிப்பட்டியை சேர்ந்த சுகிர்தா:-
பஸ்சில் நீண்டநேரம் பயணம் செய்வதற்கு சிரமம் ஏற்படுவதால் பெரும்பாலான மக்கள் ரெயில் பயணத்தையே விரும்புகின்றனர். ரெயில்களில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் சாதாரண வகை டிக்கெட்டுகளை பெற்றவர்கள் பயணிப்பது அதிகரித்து வருகிறது. குறிப்பாக எர்ணாகுளம்-பாட்னா, தன்பாத்-ஆலப்புழா, கோவை-கவுகாத்தி, கொச்சுவேலி-ஷாலிமர், விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் நீண்டதூரம் பயணம் செய்யும்போது, முன்பதிவு செய்யப்பட்ட ரெயில் பெட்டிகளில் வடமாநில தொழிலாளர்கள் இருக்கைகளை ஆக்கிரமிப்பு செய்கிறார்கள். இதுபற்றி டிக்கெட் பரிசோதகரிடம் புகார் அளித்தாலும் அவர்களிடமும் வடமாநில தொழிலாளர்கள் தகராறில் ஈடுபடுகின்றனர். ரெயிலில் முன்பதிவு செய்து நிம்மதியாக பயணம் செய்யலாம் என்கிற நிலை மாறி தற்போது நிம்மதி இழந்து பயணம் செய்யும் நிலை உள்ளது. இச்சம்பவத்தை கட்டுப்படுத்த வடமாநிலங்களுக்கு இயக்கப்படும் ரெயில்களில் போதுமான அளவில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.
விரைவில் நிரந்தர தீர்வு
இந்திய ரெயில்வேயின் கீழ் செயல்படும் அகில இந்திய ரெயில் பயணிகள் நலவாரிய உறுப்பினர் ரவிச்சந்திரன்:-
முன்பதிவு செய்த பெட்டிகளில் சாதாரண வகை டிக்கெட்டுகளை வைத்திருக்கும் வடநாட்டுத் தொழிலாளர்கள் பயணம் செய்வதாக எங்கள் கவனத்துக்கு வந்து உள்ளது. வாராந்திர ரெயில்களில்தான் இந்த பிரச்சினை இருந்தது. தற்போது அனைத்து ரெயில்களிலும் இந்த பிரச்சினை இருப்பதாக பரவலாக கூறப்படுகிறது. இந்த பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக ரெயில்வே துறையின் உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று உள்ளோம். அவர்களும் இதுகுறித்து தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். ரெயில்வே பாதுகாப்பு படையினர் இரவு நேர ரெயில்களில் மட்டுமே இருக்கிறார்கள், பகல் நேர ரெயில்களில் போலீசார் இருப்பதில்லை என்ற புகாரும் வந்து உள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவும் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது. விரைவில் இதற்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்.
அதிகாரிகள் விளக்கம்
இது குறித்து சேலம் ரெயில்வே பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறும் போது, 'ரெயில்களில் டிக்கெட் இல்லாமலும், காத்திருப்போர் பட்டியலில் உள்ள டிக்கெட்டுகளை வைத்து கொண்டும் 2-ம் வகுப்பு முன்பதிவு பெட்டியில் ஏறி அனைத்து இருக்கைகளையும் வடநாட்டு தொழிலாளர்கள் ஆக்கிரமிக்கின்றனர். முறையாக டிக்கெட் வாங்கிப் பயணம் செய்யும் பயணிகளுக்கு உட்காரக்கூட இடம் கிடைப்பதில்லை. பயணிகளுடன் வடநாட்டு தொழிலாளர்கள் இடையூறு செய்வதுடன் அராஜகத்தில் ஈடுபடுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதுகுறித்து டிக்கெட் பரிசோதகர்கள் எங்களுக்கு புகார் அளிக்கின்றனர். அதன் அடிப்படையில் வடநாட்டு தொழிலாளர்களை அடுத்த ரெயில் நிலையத்தில் 'நீ இறங்கி போ பையா' என்று கூறி இறக்கி விட்டு நடவடிக்கை எடுக்கிறோம். சமீபத்தில் கூட கேரளாவில் இருந்து ஜார்கண்ட் நோக்கி சென்ற ரெயில் சேலம் அருகே வந்த போது இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. பெரிய அளவில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு முன்பாக ரெயில்வே நிர்வாகம் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்' என்றனர்.
டிக்கெட் கட்டண சலுகை ரத்து; சேவையும் கேள்விக்குறி
முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்பட்ட டிக்கெட் கட்டண சலுகைகளை கொரோனாவிற்கு பிறகு ரெயில்வே நிர்வாகம் ரத்து செய்தது. தற்போது யாராக இருந்தாலும் முழுக் கட்டணத்தில்தான் பயணம் செய்ய வேண்டியது இருக்கிறது. அதுவும் குறிப்பாக தட்கல், பிரீமியம் தட்கல் என்ற முறையில் ஆம்னி பஸ்களில் விதிக்கப்படும் கட்டணம் போன்று கட்டணத்தை ரெயில்வே நிர்வாகம் உயர்த்தி வசூலித்து வருகிறது. வேறுவழியின்றி முதியவர்கள், பெண்கள், நோயாளிகள் அதிகக் கட்டணம் செலுத்தி ரெயிலில் பயணம் செய்கின்றனர். ஆனால் கட்டணத்தை முழுமையாக பெறும் ரெயில்வே நிர்வாகத்தால் ஏன் முழுமையான சேவையை வழங்க முடியவில்லை. உறுதி செய்யப்பட்ட டிக்கெட் வைத்திருந்தும் ரெயிலில் முறையாகப் பயணிக்க முடியாத நிலைக்கு யார் காரணம்? இதற்கு எப்போது ரெயில்வே நிர்வாகம் தீர்வு காணப்போகிறது என்று சென்னை சென்டிரல் எம்.ஜி.ஆர். ரெயில் நிலையத்தில் இருந்து வடநாட்டு ரெயிலில் பயணம் மேற்கொண்ட மூத்த பயணிகள் சிலர் முணுமுணுத்து சென்றனர்.