போக்குவரத்து பொது மேலாளர் அலுவலகத்தில்பாய், தலையணையுடன் சி.ஐ.டி.யு. தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்கடலூரில் பரபரப்பு

கடலூர் போக்குவரத்து பொது மேலாளர் அலுவலகத்தில் பாய், தலையணையுடன் வந்து சி.ஐ.டி.யு. தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-01-03 19:59 GMT



அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகளை வழங்கக்கோரி கடலூரில் கடந்த டிசம்பர் மாதம் சி.ஐ.டி.யு., தொ.மு.ச. உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். இதற்கிடையில் போராட்டத்தில் பங்கேற்ற 51 தொழிலாளர்களுக்கு (ஆப்சென்ட்) பணிக்கு வரவில்லை என்று பதிவேட்டில் எழுதியதாக தெரிகிறது.

இதை கண்டித்து பாய், தலையணையுடன் வந்து கடலூர் போக்குவரத்து பொது மேலாளர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக சி.ஐ.டி.யு. அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் அறிவித்தனர். அதன்படி நேற்று கடலூர் போக்குவரத்து பணிமனையில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர், தொழிலாளர்கள் ஒன்று திரண்டனர்.

காத்திருப்பு போராட்டம்

பின்னர் அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக பொது மேலாளர் அலுவலகத்துக்கு பாய், தலையணையுடன் வந்தனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட திருப்பாதிரிப்புலியூர் போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும், தொழிலாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதையடுத்து அவர்கள் பொது மேலாளர் அலுவலக வாசலில் பாய், தலையணையுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து அங்கேயே படுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்துக்கு சி.ஐ.டி.யு. சிறப்பு தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். மண்டல தலைவர் மணிகண்டன், துணை பொதுச்செயலாளர்கள் கண்ணன், ராமமூர்த்தி, துணை தலைவர்கள் நடராஜன், ஜான் விக்டர், முத்துக் குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சங்க பொருளாளர் அரும்பாலன் உள்பட ஏராளமான சி.ஐ.டி.யு. தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். தொடரும் இந்த போராட்டத்தால் கடலூர் போக்குவரத்து பொது மேலாளர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்