அரசு போக்குவரத்து சீருடை பணியாளர் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருப்பூர் காங்கயம் ரோடு சி.டி.சி. கார்னர் பகுதியில் அரசு போக்குவரத்துக்கழக மண்டல அலுவலகம் உள்ளது. நேற்று காலை தமிழ்நாடு அரசு போக்குவரத்து சீருடை பணியாளர் தொழிற்சங்கம் சார்பில் இந்த அலுவலகம் முன் திருப்பூர் மாவட்ட பொறுப்பாளர் பாலமுருகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழக அரசின் மாண்பை கெடுக்கும் வகையில் இலவச பயண பஸ்களை நிறுத்தி விட்டு கட்டண பஸ்களை மட்டும் இயக்கக்கூடாது. உரிமைகளை கேட்கும் சங்க உறுப்பினர்களை பணியிட மாறுதல் செய்யக்கூடாது. காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
குறைபாடுகள் பஸ்களை இயக்க நிர்பந்திக்க கூடாது. நடத்துனர்களுக்கு ஈ.டி.எம். எந்திரம் வழங்க வேண்டும். அனைத்து பஸ்களிலும் நேரப்பட்டியல் வைக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத்தின் மாநில தலைவர் குப்புசாமி, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர். திருப்பூர் மாவட்ட பொறுப்பாளர்கள் முனிராஜ், கணேசன் உள்பட போக்குவரத்து ஊழியர்கள் பலர்கலந்து கொண்டனர்.