ராமேசுவரம்-இலங்கை தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்து

ராமேசுவரம்-தலைமன்னார் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என பொதுமக்களும், சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

Update: 2023-04-02 18:45 GMT

ராமேசுவரம், 

ராமேசுவரம்-தலைமன்னார் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என பொதுமக்களும், சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

தனுஷ்கோடி

ராமேசுவரத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது தனுஷ்கோடி கம்பிப்பாடு பகுதி. 1964-ம் ஆண்டுக்கு முன்பு வரை மிகப்பெரிய தொழில் நகரமாக தனுஷ்கோடி விளங்கியது. தனுஷ்கோடியில் இருந்து இலங்கை தலைமன்னார் பகுதிக்கு தினமும் பயணிகள் கப்பல் போக்குவரத்தும் நடைபெற்று வந்தது. இர்வின் கோசன், ராமானுஜம் ஆகிய 2 கப்பல்கள் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட்டன. சென்னையில் இருந்து வரும் ரெயிலானது நேராக தனுஷ்கோடி சென்றுவிடும்.

அவ்வாறு ரெயிலில் வரும் பயணிகள் இலங்கை செல்லும் சுற்றுலா பயணிகள் தலைமன்னாருக்கு செல்வதற்காக புறப்பட்டு தயார் நிலையில் இருக்கும் கப்பலில் ஏறி இலங்கை சென்று விடுவார்கள். மற்ற சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடி பகுதியை பார்த்து விட்டு மீண்டும் அங்கிருந்து ராமேசுவரம் வந்து விடுவார்கள்.

ரெயில்வே நிலையம், மருத்துவமனை கட்டிடம், கோவில்கள், பள்ளிக்கூடம், தபால் நிலையம் என பல்வேறு வசதிகளுடன் மிகப்பெரிய தொழில் நகரமாக தனுஷ்கோடி விளங்கியது. இவ்வளவு பெரிய தொழில் நகரமாக இருந்த தனுஷ்கோடி நகரமானது கடந்த 1964-ம் ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி ஏற்பட்ட கடும் புயல் மற்றும் கடல் சீற்றத்தால் தனுஷ்கோடி நகரமே முழுமையாக அழிந்து போனது. இந்த புயலில் தனுஷ்கோடி பகுதியில் இருந்த துறைமுகமும் சேதமடைந்துடன் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல் ஒன்றும் சேதமடைந்தது.

கப்பல் போக்குவரத்து

தனுஷ்கோடி புயலுக்கு பின்னர் தனுஷ்கோடி-தலைமன்னார் இடையே நடைபெற்று வந்த கப்பல் போக்குவரத்தும் முழுமையாக நிறுத்தப்பட்டது. பின்னர் 1970-ல் இருந்து 83 வரையிலும் ராமேசுவரத்தில் இருந்து இலங்கை தலைமன்னார் வரையிலும் கப்பல் போக்குவரத்து நடைபெற்றது. ஆனால் போதிய வரவேற்பு இல்லாததால் அந்த கப்பல் போக்குவரத்தும் நாளடைவில் முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில் ராமேசுவரத்தில் இருந்து இலங்கை தலைமன்னாருக்கு மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருவதாக தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் வேலு அறிவித்தார். தமிழக அரசின் இந்த அறிவிப்பு குறித்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கூறும் கருத்துக்களை பார்ப்போம்.

பொருளாதார முன்னேற்றம்

ராமேசுவரம் விசைப்படகு மீனவர் சங்க தலைவர் தேவதாஸ்:- ராமேசுவரம்-தலைமன்னார் மற்றும் ராமேசுவரம்-காங்கேசன் துறைக்கும் இடையே மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்காக ஆராயப்பட்டு வருவதாக அமைச்சர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை வரவேற்கிறோம். ராமேசுவரம்-தலைமன்னார் இடையே மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் பட்சத்தில் தொப்புள் கொடி உறவு என்று நாம் சொல்லக்கூடிய இலங்கையோடு உறவு இன்னும் நன்றாக இருக்கும்.

ராமநாதபுரம் மாவட்டத்தை பொருத்தவரையில் வேலைவாய்ப்புக்கோ, வருமானத்திற்கோ, எந்த ஒரு தொழிற்சாலைகளும் இல்லாத நிலையே உள்ளது. ராமேசுவரத்தை பொருத்தவரை கோவில், அதற்கு அடுத்தபடியாக மீன்பிடி தொழில்தான். ராமேசுவரம்-தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் பட்சத்தில் பல்வேறு வழிகளிலும் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட அதிக வழிவகுக்கும்.

ஏற்றுமதி-இறக்குமதி

ராமேசுவரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் களஞ்சியம்:- ஏற்கனவே தனுஷ்கோடி-தலைமன்னார் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து இருந்த சமயத்தில் மிகப்பெரிய தொழில் நகரமாக தனுஷ்கோடி விளங்கியது. ராமேசுவரத்தை பொருத்தவரை கோவில் மற்றும் கடற்கரை இந்த இரண்டை தவிர்த்து வேற எந்த ஒரு வருமானத்திற்கு வழியும் இல்லாத நிலைதான் இருந்து வருகின்றது.

ராமேசுவரம்-தலைமன்னார் மற்றும் ராமேசுவரம்-காங்கேசன் துறைக்கும் மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கினால் ராமேசுவரத்திற்கு மட்டுமல்லாமல் ராமநாதபுரம் மாவட்டமும் வளர்ச்சி பாதையில் செல்லும். மேலும் இந்தியாவில் இருந்து பல பொருட்கள் கப்பல் மூலம் இலங்கைக்கும், இலங்கையிலிருந்து இந்தியாவிற்கும் ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படலாம்.

முன்னேற்ற பாதைக்கான திட்டம்

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பேரன் சேக்சலீம்: மீண்டும் ராமேசுவரம்-இலங்கை தலைமன்னார் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என்ற அறிவிப்பு நல்ல திட்டம். ஏற்கனவே கப்பல் போக்குவரத்து இருந்த சமயத்தில் பல பொருட்களை இங்கிருந்து இலங்கை கொண்டு சென்று பண்டமாற்று முறையும் நடைபெற்றுள்ளது. பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கினால் ராமேசுவரம் இன்னும் பொருளாதார ரீதியில் மேம்பட வாய்ப்பாக இருக்கும். இதன் மூலம் ராமநாதபுரம் மாவட்ட முன்னேற்றத்திற்கும் ஒரு வளர்ச்சி திட்டம் என்று சொல்லலாம். எந்த வசதியும் இல்லாத சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பே கப்பல் போக்குவரத்து நடைபெற்ற போது மிகப்பெரிய தொழில் நகரமாக தனுஷ்கோடி விளங்கியுள்ளது. தற்போது எல்லா விதமான வசதிகளும் உள்ள இந்த காலத்தில் மீண்டும் தலைமன்னார் வரை கப்பல் போக்குவரத்து தொடங்கும் திட்டம் மிகப்பெரிய ஒரு முன்னேற்ற பாதைக்கான திட்டம். இந்த திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் இணைந்து விரைந்து செயல்படுத்த வேண்டும்.

சுற்றுலா பயணிகள் ஆர்வம்

சுற்றுலா பயணி ராமச்சந்திரன்:- கடலின் நடுவே தனுஷ்கோடி அரிச்சல் முனை வரை சாலை அமைக்கப்பட்டுள்ளது பார்ப்பதற்கு மிக அழகாக உள்ளது. ஏற்கனவே புயலுக்கு முன்பு வரையிலும் தனுஷ்கோடி-தலைமன்னார் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தும் நடைபெற்று வந்ததாக கேள்விபட்டுள்ளேன். புயலுக்கு பிறகு இந்த கப்பல் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது மீண்டும் ராமேசுவரம்-தலைமன்னார் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கான ஆராய்ச்சி பணிகள் நடைபெற்று வருவதாக சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படும் பட்சத்தில் இதன் மூலம் ராமேசுவரம் வரக்கூடிய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இன்னும் பல மடங்கு அதிகரிக்கும். இங்கு வரக்கூடிய சுற்றுலா அனைவருமே கண்டிப்பாக கப்பல் மூலம் தலைமன்னார் வரை சென்றுவர ஆர்வம் காட்டுவார்கள். வணிக ரீதியாகவும் இந்த திட்டம் வெற்றிகரமாக இருக்கும். இதை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ராமேசுவரத்தில் இருந்து இலங்கை தலைமன்னாருக்கு சுமார் 40 கிலோமீட்டர் தூரமும், ராமேசுவரத்தில் இருந்து காங்கேசன் துறைக்கு 80 கிலோமீட்டர் தூரமும் இருக்கும் எனக்கூறப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்