கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் பூசாரி கையால் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்
கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் அரவாண் சாமி கண் திறத்தல் நிகழ்ச்சியையொட்டி பூசாரி கையால் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள் விடிய, விடிய ஆடிப்பாடி கும்மியடித்து உற்சாகமடைந்தனர்.
உளுந்தூர்பேட்டை
கூத்தாண்டவர் கோவில்
3-ம் பாலினமாக கருதப்படும் திருநங்கைகள், குலதெய்வமாக வணங்கும் கூத்தாண்டவர் கோவில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கிராமத்தில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்றதும், பழமைவாய்ந்ததுமான கூத்தாண்டவர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் 18 நாட்கள் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இத்திருவிழாவில் திருநங்கைகள் ஆயிரக்கணக்கில் கலந்துகொள்வார்கள்.
தல வரலாறு
இந்த திருவிழாவிற்கு ஒரு வரலாறு உண்டு. மகாபாரத போரில் பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் போர் மூண்டபோது பாண்டவர்கள் வெற்றிபெற வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தனர்.
அப்படிப்பட்ட சூழலில் பாண்டவர்கள் வெற்றி பெற 32 சாமுத்திரிகா லட்சணம் பொருந்திய ஆண்மகனை பலி கொடுக்க வேண்டும். இதற்கு தகுதியானவர்கள் கிருஷ்ணன், அர்ஜூனன், அரவாண் ஆகிய 3 பேர் மட்டுமே இருந்த நிலையில் கிருஷ்ணனையும், அர்ஜூணனையும் பலி கொடுக்க முடியாத நிலையில் அரவாணிடம் இதுகுறித்து கேட்டபோது அவர் ஒப்புக்கொண்டார்.
அப்போது அரவாண் ஒரு நிபந்தனை விதித்தார். அதாவது தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் எனவும் அதனால் தாம்பத்திய உறவும் தேவை எனக்கூறினார். விடிந்தால் பலியாகப்போகும் ஒருவருக்கு யார் பெண் கொடுப்பார்கள் என்று எண்ணியிருந்த சூழலில்தான், கிருஷ்ணன் மோகினி அவதாரம் எடுத்து பெண்ணாக உருமாறினார். உடனே அரவாணுக்கு திருமணம் நடந்தது. அதன் பின்பு இரவு முழுவதும் கணவன்- மனைவியாக வாழ்ந்த அரவாண் அதிகாலை களப்பலி கொடுக்கப்பட்டார்.
அதன் பிறகுதான் பாண்டவர்கள் வெற்றி பெற்றார்கள். அதனால் கிருஷ்ணனின் மறு அவதாரமாக தங்களை பாவித்துக்கொண்டு அரவாணை தங்களது கணவராக ஏற்று திருநங்கைகள், கோவில் பூசாரி கையால் தாலி கட்டிக்கொண்டு இரவு முழுவதும் திருநங்கைகள் ஆடிப்பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொள்வார்கள்.
கலை நிகழ்ச்சிகள்
இத்தகைய சிறப்புமிக்க இந்த திருவிழா கடந்த மாதம் 18-ந் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து 19-ந் தேதி மாலை பந்தலடி தெய்வநாயகம் செட்டியார் தோப்பில் பாரதம் ஆரம்பம் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் 20-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை ஒவ்வொரு நாளும் காலை வேளையில் சாந்தனுசரிதம், பீஷ்மர் பிறப்பு, தர்மர் பிறப்பு, பாஞ்சாலி பிறப்பு, பகாசூரம் வதம், பாஞ்சாலி திருமணம், கூத்தாண்டவர் பிறப்பு, ராஜசூய யாகம், வெள்ளிக்கால் நடுதல், கிருஷ்ணன் தூது, அரவாண் பலி, கம்பம் நிறுத்துதல் நிகழ்ச்சிகளும், இரவில் சாமி திருவீதி உலாவும் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொள்வதற்காக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு விழுப்புரம் மற்றும் கூவாகம் கிராமத்திற்கு வந்தனர். இவர்களை மகிழ்விக்கும் வகையிலும், உற்சாகப்படுத்தும் விதமாகவும் திருநங்கைகளுக்காக பல்வேறு நடனப்போட்டிகள், கிராமிய பண்பாட்டு கலை நிகழ்ச்சிகள், அழகிப்போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் திருநங்கைகள் ஏராளமானோர் கலந்துகொண்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்
விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று மாலை சாமி திருக்கண் திறத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி ஆயிரக்கணக்கான திருநங்கைகள், பட்டுப்புடவை அணிந்தும், தலைநிறைய பூக்களை வைத்துக்கொண்டும், கைநிறைய வளையல்கள், காது, மூக்கு, கழுத்தில் நகைகளையும் அணிந்து தங்களை புதுமணப்பெண்கள்போல் அலங்கரித்துக்கொண்டு கூத்தாண்டவர் கோவிலுக்கு வந்தனர்.
பின்னர் அங்குள்ள கடைகளில் மாங்கல்யத்தை வாங்கிய திருநங்கைகள், கோவிலுக்குள் சென்று அரவாணை பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்து அரவாணை தங்கள் கணவனாக பாவித்துக்கொண்டு கோவில் பூசாரி கையால் தாலி கட்டிக்கொண்டனர்.
விடிய, விடிய நடனம்
அதன் பிறகு கோவிலில் இருந்து வெளியே வந்த திருநங்கைகள், கோவில் வளாகத்தில் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி கூத்தாண்டவரை வழிபட்டதோடு ஆட்டம் ஆடி, பாட்டுப்பாடி கும்மியடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். திருநங்கைகளோடு வேண்டுதலின்பேரில் ஏராளமான ஆண்களும், பெண்களும், சிறுவர், சிறுமிகளும் தாலி கட்டிக்கொண்டனர்.
தாலி கட்டிய பிறகு புதுமணப்பெண்கள் போல் காட்சியளித்த திருநங்கைகள் கூத்தாண்டவர் கோவில் அருகில் இரவு முழுவதும் விடிய, விடிய நடனமாடியும், கும்மியடித்தும் கூத்தாண்டவரை தனது கணவராக நினைத்து அவரின் அருமை, பெருமைகள் குறித்து ஆடிப்பாடி உற்சாகமடைந்தனர்.
இன்று தேரோட்டம்
விழாவின் 16-வது நாள் நிகழ்ச்சியாக இன்று (புதன்கிழமை) அதிகாலை கோவிலில் உள்ள அரவாண் சிரசுக்கு முதல் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன் பிறகு காலை 6.30 மணியளவில் தேரோட்டம் நடக்கிறது. தேரை உளுந்தூர்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. மணிக்கண்ணன் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைக்கிறார்.
தேர் அழிகளம் புறப்பட்டவுடன் திருநங்கைகள் ஒப்பாரி வைத்து அழுவார்கள். பின்னர் மதியம் நத்தம் கிராம பந்தலுக்கு தேர் வந்தடைந்ததும் அங்கு அரவாண் களப்பலி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது திருநங்கைகள் தங்கள் தலையில் சூடியிருந்த பூக்களை பிய்த்து எறிந்து, நெற்றியில் உள்ள குங்கும பொட்டை அழித்து வெள்ளைச்சேலை அணிந்து விதவைக்கோலம் பூண்டு ஒப்பாரி வைத்து அழுதுவிட்டு கூவாகத்தில் இருந்து தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டுச்செல்வார்கள்.