திருநங்கை அடித்துக் கொலை; லாரி டிரைவர் கைது

நெல்லை அருகே திருநங்கையை அடித்துக் கொலை செய்த லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-12-18 20:23 GMT

நெல்லை அருகே திருநங்கையை அடித்துக் கொலை செய்த லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

திருநங்கை

நெல்லை அருகே உள்ள சுத்தமல்லியை சேர்ந்தவர் பிரபு (வயது 35). திருநங்கையான இவர் பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டி மலை அருகே உள்ள நான்கு வழிச்சாலையில் உடலில் பலத்த காயங்களுடன் நேற்று முன்தினம் மயங்கிய நிலையில் கிடந்தார்.

இதைபார்த்த அப்பகுதியினர் பெருமாள்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பெருமாள்புரம் உதவி போலீஸ் கமிஷனர் சதீஷ்குமார், இன்ஸ்பெக்டர் வனசுந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பிரபுவை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

அடித்துக் கொலை

அப்போது, பிரபுவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக தனக்கும், லாரி டிரைவர் ஒருவருக்கும் முன்விரோதம் இருந்தது. இதுதொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது தன்னை அந்த லாரி டிரைவர் அடித்து தாக்கியதாக பிரபு போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பிரபு நேற்று முன்தினம் இரவில் பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து பெருமாள்புரம் போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்தனர்.

டிரைவா் கைது

தொடர்ந்து துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் உத்தரவின் பேரில் உதவி போலீஸ் கமிஷனர் சதீஷ்குமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் தலைமையிலான போலீசார், சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

இதில் அந்த வழியாக சென்ற லாரியின் பதிவு எண்ணை கொண்டு, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள திட்டங்குளத்தை சேர்ந்த வேலுச்சாமி மகன் ரமேஷ்குமார் (40) என்பவரை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை அருகே திருநங்கை அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்