அரசாணையை பின்பற்றி கிராம நிர்வாக அதிகாரிகள் பணியிட மாற்றம்-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

அரசாணையை பின்பற்றி கிராம நிர்வாக அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2022-09-30 19:30 GMT

அரசாணையை பின்பற்றி கிராம நிர்வாக அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

கிராம நிர்வாக அதிகாரிகள்

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு கோவிலான்விளையைச் சேர்ந்த செந்தில்குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

குமரி மாவட்டம் திருவட்டார் தாலுகா கண்ணனூரில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றுகிறேன். தமிழ்நாடு கிராம நிர்வாக அதிகாரிகள் சங்கத்தின் தலைவராகவும் உள்ளேன். ஒரு மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களை 'ஏ', 'பி', என 2 ஆக வகைப்படுத்த வேண்டும். 'ஏ' பிரிவான நகரங்களில் கிராம நிர்வாக அதிகாரிகள் ஓராண்டு மட்டும் பணிபுரியலாம்.

அதேபோல 'பி' பிரிவான கிராமப்புறங்களில் கிராம நிர்வாக அதிகாரிகள் 3 ஆண்டு வரை பணியாற்றலாம். அதன்பின்பு 'ஏ' பிரிவில் உள்ள அதிகாரிகள் 'பி' பிரிவுக்கும், 'பி' பிரிவில் உள்ள அதிகாரிகள் 'ஏ' பிரிவுக்கும் கட்டாயம் இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்று கடந்த 2008-ம் ஆண்டின் அரசாணை தெரிவிக்கிறது. இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும், கன்னியாகுமரி மாவட்டத்தின் வருவாய் கிராமங்களை வகைப்படுத்தவோ, பட்டியலை வெளியிடவோ இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்தநிலையில் கிராம நிர்வாக அதிகாரிகளை இடமாற்றம் செய்ய 30-ந்தேதிக்குள் (அதாவது நேற்றைக்குள்) கவுன்சிலிங் நடத்த கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இது சட்டவிரோதம். எனவே கன்னியாகுமரி மாவட்ட வருவாய் கிராமங்களை வகைப்படுத்தி, அதன்பின் கிராம நிர்வாக அதிகாரிகள் பணியிட மாற்ற கவுன்சிலிங் நடத்த வேண்டும். அதுவரை இந்த நடவடிக்கைக்கு தடைவிதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரணை முடிவில், அரசாணையின்படி, கன்னியாகுமரி மாவட்ட கிராம நிர்வாக அதிகாரிகளை 3 பிரிவாக பிரித்து பட்டியல் தயாரிக்கவில்லை என்பது தெரிகிறது. எனவே தற்போதைய நடவடிக்கையை ஒத்திவைத்துவிட்டு, அரசாணையை கண்டிப்பாக பின்பற்றி முறையாக கிராம நிர்வாக அதிகாரிகள் பணியிட கவுன்சிலிங்கை நடத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்