பள்ளி மேலாண்மை குழுவை வழிநடத்த உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பயிற்சி
கோவையில் பள்ளி மேலாண்மை குழுவை வழிநடத்த உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
கோவை
கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளி மேலாண்மைக்குழுவை வலுப்படுத்தவும், அரசு பள்ளி குழந்தைகளின் தரமான கல்வியை உறுதி செய்யவும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு வருகிற 22-ந் தேதி வரை பள்ளி மேலாண்மை பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
கோவை மாநகராட்சி சார்பில் 17 மேல்நிலைப்பள்ளிகள், 11 உயர்நிலைப்பள்ளிகள், 14 நடுநிலைப்பள்ளிகள், 42 தொடக்கப்பள்ளிகள் என்று மொத்தம் 84 பள்ளிகள் உள்ளன. ஒவ்வொரு பள்ளிக்கும் மேலாண்மைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேலாண்மைக்குழுக்களை வழிநடத்துவது குறித்து கோவை மாநகராட்சியில் உள்ள 100 கவுன்சிலர்கள், 7 நகராட்சிகளை சேர்ந்த 198 உறுப்பினர்கள் மற்றும் 33 பேரூராட்சிகளை சேர்ந்த 513 உறுப்பினர்கள் ஆகியோருக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கோவை சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நேற்று மாநகராட்சியில் உள்ள 100 கவுன்சிலர்களுக்கு பள்ளி மேலாண்மை பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதில் மாவட்ட கருத்தாளர்களான ஆசிரியர்கள் சுபிதா, ரம்யா மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பிரியா, பிரேமா ஆகியோர் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பயிற்சி அளித்தனர். மேலும் மாநகராட்சி மேயர் கல்பனா, கல்வி அதிகாரிகள் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பள்ளி மேலாண்மை பயிற்சி தர வேண்டியதன் அவசியம் குறித்து பேசினர்.
கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளுக்கு உள்பட்ட மாநகராட்சி பள்ளிகளில் பள்ளிமேலாண்மைக்குழுக்களை திறம்பட நடத்தி, தரமான கல்வி கிடைக்கவும், பிரச்சினைகளை தீர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.