என்ஜினீயரிங், தொழில்நுட்ப பிரிவுகளிலும் தமிழ்வழியில் பயிற்றுவிக்க நடவடிக்கை

இந்த கல்வியாண்டு முதல் பாலிடெக்னிக் கல்லூரிகளிலும், என்ஜினீயரிங், தொழில்நுட்ப பிரிவுகளிலும் தமிழ்வழியில் பயிற்றுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார்

Update: 2023-05-26 18:30 GMT

விழுப்புரம்

துணைவேந்தரின் தவறு

விழுப்புரத்தில் நேற்று உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அண்ணா பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிகளில் சிவில், மெக்கானிக்கல் பாடப்பிரிவுகளில் தமிழ், ஆங்கில வகுப்புகளில் மாணவர் சேர்க்கையின்மையால் மூடுகிறோம் என்று 2 நாட்களுக்கு முன்பு அண்ணா பல்கலைக்கழகம் அறிக்கை விட்டிருந்தது. அதுகுறித்து தமிழக அரசின் உயர்கல்வித்துறை செயலாளருக்கோ அல்லது எனக்கோ எந்த அறிவிப்பும் இல்லாமல் அவர்களாக எடுத்த முடிவு. நாங்கள் உடனடியாக துணைவேந்தரை தொடர்புகொண்டு இதுபோன்று செய்வது தவறு, தமிழ்வழியை வளர்ப்பதுதான் தமிழக முதல்-அமைச்சரின் நோக்கம், அதற்காகத்தான் முதலாம் ஆண்டில்கூட தமிழ்மொழி பாடத்தை இதுவரை இல்லாத அளவுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறோம் என்று சொன்னோம்.

தமிழ்வழி வகுப்புகள்

இந்த அறிவிப்பு மிகவும் மோசமானது என்று சொல்லியவுடனே அவரும் அதை மீண்டும் திரும்பப்பெற்று நேற்றைக்கே அறிக்கையும் வெளியிட்டிருக்கிறார். இனி இதுபோன்று வராது, தமிழ்வழியில் நடக்கும் என்று அவரும் அறிவித்திருக்கிறார். ஆகவே மாணவர்களின் எண்ணிக்கை என்பது முக்கியமல்ல. நம்முடைய தாய்மொழியில் படிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்.

இந்த ஆண்டே சிவில், மெக்கானிக்கல் போன்ற பாடப்பிரிவுகள் மட்டுமின்றி மற்ற பாடப்பிரிவுகளிலும் தமிழ்வழியிலேயே நடத்த வேண்டும் என்ற திட்டத்தை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளையும் இந்த அரசு எடுத்திருக்கிறது. வருகிற ஆண்டுகளில் தமிழ்வழியில் பொறியியல் கல்லூரிகளிலே மற்ற பிரிவுகளிலும் விரிவுப்படுத்த ஆவன செய்யப்படும்.

பாடங்கள் மொழிபெயர்ப்பு

இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்கத்தான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மிகத்திறமையாக சட்டமன்றத்தில் ஒரு சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறார். துணைவேந்தர்களை நியமிக்கிற அதிகாரம் மாநில அரசாங்கத்துக்கு வேண்டும், மாநில அரசின் கட்டுப்பாட்டில் துணைவேந்தர்கள் இருந்தால்தான் இதுபோன்று நடக்காது. அதற்காக மாநில கல்விக்கொள்கையும், அதற்காக ஒரு குழுவையும் முதல்-அமைச்சர் நியமித்து அந்த குழுவின் அறிக்கையும் வெகு விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. தமிழ்பாடத்தை பொறியியல் கல்லூரிகளில் கொண்டு வருவது மட்டுமல்ல, இந்த கல்வியாண்டு முதல் பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் தமிழ்மொழி பாடத்தை கற்றுக்கொடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் சொல்லியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் படிப்படியாக அனைத்து என்ஜினீயரிங், தொழில்நுட்ப பிரிவுகளில் தமிழ்வழியில் பயிற்றுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக தமிழிலேயே அந்த பாடப்புத்தங்களை மொழி பெயர்ப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். தமிழ்வழியில் படிக்கிற மாணவர்களுக்கு வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை அளிக்கப்படும்.

விவாதிக்க தயாரா?

இருமொழி கொள்கைக்கு எதிராக, மூன்றுமொழி கொள்கையை கொண்டு வருவதாக கூறுகிறது ஒன்றிய அரசு. இதனை அண்ணாமலை வரவேற்கிறாரா? முதலில் அண்ணாமலை இதற்கு பதில் சொல்லட்டும். அவருக்கு வரலாறும் தெரியாது, எதுவும் தெரியாது. நேருக்கு நேராக வரச்சொல்லுங்க விவாதிக்கலாம். நான் தயாராக இருக்கேன். அவர் தயாராக இருக்கிறாரா? அவருக்கு அக்கறையிருந்தால் எவ்வளவோ செய்திருக்கலாம்.

மும்மொழிக்கொள்கையை மாற்ற என்ன செய்யப்போகிறார். அப்படி செய்தால் அவருக்கு தமிழ்மொழி மீது பற்று இருக்கிறது என்று கூறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், முன்னாள் நகரமன்ற தலைவர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்