தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் இயக்க பயிற்சி
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் இயக்க பயிற்சியின் நோக்கம் குறித்து ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கினர்.
மதுரை
மதுரை மாவட்டத்தில் உள்ள 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை படிக்கும் 8 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு எண்ணறிவு மற்றும் எழுத்தறிவு வழங்க எண்ணும், எழுத்தும் இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே, இந்த திட்டம் வருகிற கல்வியாண்டு முதல் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதற்காக வட்டார அளவிலான தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு 5 நாள் பயிற்சி நடத்தப்படுகிறது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் நடத்தும் இந்த பயிற்சியில் மதுரை மாவட்டத்தில் உள்ள 15 கல்வி ஒன்றியங்களில் 22 மையங்களில் 58 பிரிவுகளாக நடைபெற்று வருகிறது. பயிற்சியை, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன கல்வியாளர்கள், மாநில மற்றும் மாவட்ட அளவிலான பயிற்சி பெற்ற கருத்தாளர்கள் நடத்துகின்றனர். இதில், மதுரை மாவட்டத்தை சேர்ந்த 2,413 ஆசிரியர்கள் கலந்து கொள்கின்றனர். முன்னதாக இந்த பயிற்சியை மாநில கூடுதல் திட்ட இயக்குனர் நாகராஜ முருகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கார்த்திகா, ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வி ஆகியோர் பயிற்சியின் நோக்கம் மற்றும் மாணவர்களுக்கு இந்த திட்டத்தின் கருப்பொருளை கொண்டு சேர்ப்பது எப்படி என்பது குறித்து ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கினர்.