2-ம் நிலை காவலர் பணிக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பயிற்சி தொடக்கம்
2-ம் நிலை காவலர் பணிக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பயிற்சி தொடங்கியது.
திருவெறும்பூர்:
தமிழக காவல்துறையில் கடந்த 2022-ம் ஆண்டு நடந்த காவல்துறை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் தற்போது தொடங்கப்பட்டு வருகிறது. இதில் கோவை, திருப்பூர், வேலூர், பெரம்பலூர், கரூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இரண்டாம் நிலை காவலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 373 பெண்களுக்கு, திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே நவல்பட்டு அண்ணா நகர் பகுதியில் உள்ள காவலர் பயிற்சி கல்லூரியில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்புகள் நேற்று முன் தினம் தொடங்கியது. இதில் அவர்களுக்கு நன்னடத்தை, கவாத்து, துப்பாக்கி சுடுதல், சட்ட வகுப்பு, பொது மக்களிடம் நடந்து கொள்ளும் அணுகுமுறை உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் 6 மாத காலத்திற்கு வழங்கப்படுகிறது. பின்னர் அவர்கள் ஒரு மாத காலத்திற்கு போலீஸ் நிலையங்களில் பயிற்சிக்கு அமர்த்தப்படுவார்கள். 7 மாத பயிற்சி முடிந்த பின்னர் போலீஸ் நிலையங்களுக்கு பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக காவலர் பணிக்கு தேர்வாகி பயிற்சி கல்லூரிக்கு வந்தவர்களை கல்லூரி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி, துணை முதல்வர் மணவாளன் தலைமையிலான காவலர் பயிற்சி பள்ளி போலீசார் இனிப்பு கொடுத்து வரவேற்றனர். பின்னர் பயிற்சி வகுப்பை தொடங்கினார்கள்.