'எண்ணும், எழுத்தும்' திட்டத்தில் பயிற்சி
பேராவூரணியில் எண்ணும், எழுத்தும் திட்டத்தில் நடந்த பயிற்சி வகுப்பில் 109 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
பேராவூரணி:-
பேராவூரணியில் எண்ணும், எழுத்தும் திட்டத்தில் நடந்த பயிற்சி வகுப்பில் 109 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
பயிற்சி முகாம்
தஞ்சை மாவட்டம், பேராவூரணி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வட்டார வள மையத்தின் சார்பில், தொடக்க நிலையில் 1 முதல் 3-ம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கான 'எண்ணும் எழுத்தும்' திட்டத்தில் 5 நாள் பயிற்சி முகாம் தொடங்கியது.
பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்த முகாம் நடந்தது. இதை வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) முருகேசன் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பயிற்சியின் நோக்கம் பற்றி எடுத்துக் கூறினார்.
ஆங்கிலம்- கணிதம்
பயிற்சியில் 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களை எளிமையாக பயிற்று விப்பது குறித்தும், பாடல், கதை எழுதுதலை ஊக்குவித்து படைப்பாற்றலை வெளிக்கொண்டு வருவது குறித்தும் ஆசிரியர்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி, வட்டார கல்வி அலுவலர்கள் அங்கையற்கண்ணி, சங்கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் இளையராணி, மாவட்ட கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் ஜெயராஜ் ஆகியோர் பயிற்சியினை பார்வையிட்டனர். இதில் 109 ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.